உள்ளூர் செய்திகள்

மாணவர்களை கட்டாயப்படுத்தி நீட் எதிர்ப்புக்கு கையெழுத்து

சென்னை: அரசு பள்ளி மாணவர்களை, வகுப்பு நேரத்தில் வெளியே அழைத்துச் சென்று, நீட் எதிர்ப்புக்காக கையெழுத்து இயக்கம் நடத்திய தி.மு.க.,வினர் மீது, பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிருப்தியில் உள்ளனர்.சென்னை, செங்குன்றம் அடுத்த மொண்டியம்மன் நகரில், தி.மு.க., இளைஞர் அணி சார்பில், நீட்டை ஒழிப்போம், மாணவர்களை காப்போம் என்ற தலைப்பில், நேற்று காலை கையெழுத்து இயக்கம் நடந்தது.மாதவரம் தொகுதி தி.மு.க.,  எம்.எல்.ஏ., சுதர்சனம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது, அந்த பகுதி தி.மு.க.,வினர், பாடியநல்லுாரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் 150க்கும் மேற்பட்ட மாணவர்களை, மொண்டியம்மன் நகர் மார்க்கெட் பகுதிக்கு அழைத்துச் சென்று, நீட் எதிர்ப்புக்காக கையெழுத்து பெற்றனர்.சீருடையில் வந்த மாணவர்கள், எம்.எல்.ஏ., சுதர்சனம் பேசி முடிக்கும் வரை, ஒரு மணி நேரம் வெயிலில் காத்திருந்து, கையெழுத்திட்டுச் சென்றனர். இதைக்கண்ட சில மாணவர்களின் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்தனர்.பள்ளி வகுப்பு நடக்கும் நேரத்தில் மாணவ, மாணவியரை கட்டாயமாக அழைத்துச் சென்று, சாலையில் காத்திருக்க வைத்து, நீட் எதிர்ப்பு அரசியல் செய்ய கையெழுத்து பெறுவது, என்ன நியாயம் என ஆதங்கப்பட்டனர்.இதற்கு பள்ளி ஆசிரியர்கள் எப்படி அனுமதி அளித்தனர் என்றும், கேள்வி எழுப்பினர். தமிழக பள்ளிக் கல்வித்துறை, இது குறித்து உரிய விசாரணை நடத்தி, பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆவேசப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்