பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு தொகுப்பூதியம் உயர்வு
பெ.நா.பாளையம்: அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை, 12 ஆயிரத்து, 500 ரூபாயாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.அனைவருக்கும் கல்வி திட்டத்தின் வாயிலாக தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களுக்கு இதுவரை மாதம் பத்தாயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.இந்த ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் கீழ் பணியாற்றும், 12 ஆயிரத்து,105 பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களுக்கு மாதம் ஒன்றுக்கு தொகுப்பூதியமான, 10 ஆயிரத்தை,12 ஆயிரத்து, 500 ஆக உயர்த்தி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.இது குறித்து பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் கூறுகையில், வாரம் மூன்று நாட்கள் பள்ளிகளில் பல்வேறு பாடங்களை கற்றுத்தரும் பணியில் ஈடுபடுகிறோம். இது தவிர, அவசர, அவசிய காலங்களில் பள்ளிக்கு வந்து கற்றல் மற்றும் பிற பணிகளில் ஈடுபடுகிறோம்.எங்களையும் முழு நேர ஆசிரியர்களாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்பி, பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம். மாநிலம் முழுவதும் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களாக, 16 ஆயிரத்தும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வந்தனர்.இதில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இதிலிருந்து விலகி, பல்வேறு பணிகளுக்கு சென்று விட்டனர். தற்போது, 12 ஆயிரம் பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். நீண்டகால கோரிக்கைக்கு பிறகு தற்போது, 2 ஆயிரத்து, 500 ரூபாய் மட்டும் உயர்த்தப்பட்டு உள்ளது. குறைந்தபட்சம், 20 ஆயிரம் ரூபாய் தொகுப்பு ஊதியமாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.