பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டுதல்
சிவகங்கை: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டுதல் மற்றும் கல்லுாரி களப் பயணம் நிகழ்ச்சி மன்னர் துரைசிங்கம் அரசு கல்லுாரியில் நடந்தது.மலம்பட்டி, மறவமங்கலம், காளையார்கோவில், கீழடி, மாங்குடி, திருப்பாச்சேத்தி, சாலைக்கிராமம் ஆகிய பள்ளி மாணவர்களும், இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் கீழப்பூங்குடி, திருப்புவனம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அல்லிநகரம், இடைக்காட்டூர், கட்டிக்குளம், கொல்லங்குடி, கொம்புகாரனேந்தல், சிலுக்குபட்டி, பழையனுார், மானாமதுரை, அரசனுார், திருமாஞ்சோலை ஆகிய பள்ளி மாணவர்களும் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லுாரிக்கு களப்பயணம் மேற் கொண்டனர்.கல்லுாரிக்கு வந்த மாணவர்களுக்கு கல்லுாரியின் சிறப்புகள், வசதிகள், பயிற்றுவிக்கப்படும் பாடப்பிரிவுகள் போன்ற தகவல்களை கல்லுாரி முதல்வர் துரையரசன், விலங்கியல் துறைத்தலைவர் அழகுச்சாமி, வரலாற்றுத்துறைத் தலைவர் கலைச்செல்வி விளக்கினர்.மாணவர்கள் அனைத்துத்துறைகள், நுாலகம் ஆகியவற்றைப் பார்வையிட்டனர். துறைத்தலைவர்கள் மாணவர்களுக்கு தமது துறைகளில் உள்ள ஆய்வக வசதிகள், வகுப்பறை வசதிகள், நுாலக வசதிகளை விளக்கினர்.இந்நிகழ்ச்சியில் 291 மாணவர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் மைக்கேல், ஆனந்த செல்வம், பொன்மலர் செய்திருந்தனர்.