எழுத்தாளர் சிவசங்கரிக்கு கம்பன் புகழ் விருது
சென்னை: எழுத்தாளர் சிவசங்கரிக்கு, அகில இலங்கை கம்பன் கழகத்தின் கம்பன் புகழ் விருது வழங்கப்பட்டுள்ளது.இலங்கையில், 44 ஆண்டுகளாக செயல்படும், அகில இலங்கை கம்பன் கழகம், ஆண்டு தோறும் தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்களுக்கு, ஒரு லட்சம் ரூபாயுடன், 'கம்பன் புகழ் விருது' வழங்கி கவுரவித்து வருகிறது.இலங்கை தலைநகர் கொழும்பில், சமீபத்தில் நடந்த விழாவில், இலங்கை கம்பன் கழக தலைவர் நீதிபதி விஸ்வநாதன், சிவசங்கரிக்கு கம்பன் புகழ் விருதையும், ஒரு லட்சம் ரூபாயையும் வழங்கினார்.இலங்கை கம்பன் கழகத்தை சேர்ந்த தமிழறிஞர் இலங்கை ஜெயராஜ், இலக்கிய பேச்சாளர்கள் பர்வீன் சுல்தானா, பாரதி கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான சிவசங்கரி, 36 நாவல்கள், 48 குறு நாவல்கள், நுாற்றுக்கணக்கான சிறுகதைகள் மற்றும் பயணக் கட்டுரைகள் எழுதியவர். சரஸ்வதி சம்மான் போன்ற உயரிய விருதுகளை பெற்றவர்.சி.நாராயணா ரெட்டி விருதுஇந்திய அளவில் வழங்கப்படும் முக்கியமான இலக்கிய விருதுகளில் ஒன்றான, விஸ்வம்பரா சி.நாராயண ரெட்டி தேசிய இலக்கிய விருது - 2024ம் எழுத்தாளர் சிவசங்கரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாதில் ஜூலை 29ல் நடக்கவுள்ள விழாவில், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இந்த விருதை வழங்க உள்ளார்.