போகர் தாவரவியல் பூங்கா: துணைவேந்தர் பாராட்டு
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், வனத்துக்குள் திருப்பூர் என்ற திட்டத்தில், 18 லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்படுகிறது; நடப்பு ஆண்டில், இன்னும் இரண்டு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி நடந்து வருகிறது.அவ்வகையில், திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் பேரூராட்சி, காளிபாளையத்தில், 10.15 ஏக்கரில், போகர் தாவரவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இலுப்பை, வேம்பு, பூவரசு, தான்றி, புங்கன், இயல்வாகை உட்பட, அரியவகை மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்படுகின்றன.இந்த பூங்காவை வேளாண் பல்கலை துணை வேந்தர் கீதாலட்சுமி பார்வையிட்டு, சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் பழனிசாமி, போகர் தாவரவியல் பூங்காவின் தலைவர் வெள்ளியங்கிரி மற்றும் உறுப்பினர்களை பாராட்டினார்.இதுகுறித்து பூங்கா அமைப்பாளர்கள் கூறியதாவது: சாமளாபுரம் வந்திருந்த துணை வேந்தர், போகர் தாவரவியல் பூங்கா குறித்து கேள்விப்பட்டு, நேரில் பார்வையிட்டார். மரம் வளர்ப்பது என்பது மிகவும் முக்கியமானது. எதிர்காலத்தில், ஆக்ஸிஜனை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை கூட ஏற்படலாம். மரம் வளர்ப்பின் பயன்கள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மரம் வளர்ப்பு தொடர்பான ஆலோசனை, வழிகாட்டுதல் தேவையெனில், வேளாண் பல்கலையை தொடர்புகொள்ளலாம். மக்கள் பிரதிநிதிகளும், பொதுநல அமைப்புகளும், மரம் வளர்ப்பை ஊக்குவிக்க வேண்டுமென, கேட்டுக்கொண்டார்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.