உள்ளூர் செய்திகள்

மனதை கட்டுப்படுத்தினால் உலகை வெல்லலாம்;மாணவர்களுக்கு அறிவுரை

சூலுார்: மனதை கட்டுப்படுத்தினால் உலகத்தையே வெல்லலாம், என, தன்னம்பிக்கை பேச்சாளர் கவிதாசன் பேசினார்.அரசூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் சார்பில், நெல்லிக்கனி எனும் தலைப்பில் தன்னம்பிக்கை பயிலரங்கம் நடந்தது.பள்ளி தலைமையாசிரியர் கண்ணன் வரவேற்றார். தலைவர் ராம்குமார், செயலாளர் சவுண்டப்பன், சாண்டியாகு ஜேசு மற்றும் ஆசிரிய, ஆசிரியர்கள் பங்கேற்றனர். சிறந்த கேள்விகளை கேட்ட மாணவ, மாணவியருக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.மாணவ, மாணவியர் மத்தியில் தன்னம்பிக்கை பேச்சாளர் கவிதாசன் பேசியதாவது:கற்க வேண்டியதை தவறில்லாமல் கற்றுக்கொண்டு, அதன்படி வாழ்ந்தால், யாருடைய துணையும் நமக்கு தேவையிருக்காது. படித்து முன்னேறினால் சொந்த காலில் நிற்கலாம். உங்களை நீங்களே செதுக்கி கொள்ளவேண்டும். சாதிக்க வேண்டியதை சிந்தியுங்கள். உங்கள் மனது உங்களுக்கு நண்பனாக இருந்தால், நல்வழி காட்டும். எதிரியாக இருந்தால் தீய வழிக்கு அழைத்து செல்லும். மனதை கட்டுப்படுத்தினால், உலகத்தையே வெல்லலாம். கடின உழைப்பு வேண்டும். எதையும் தள்ளி போடாதீர். தினமும் படிக்க வேண்டும். வாசிக்காத நாள் சுவாசிக்காத நாளாகும். அதனால், முயற்சியையும், பயிற்சியையும் கைவிடாதீர்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்