நானோ உரம்: வேளாண் பல்கலைக்கு காப்புரிமை
கோவை: மெதுவாக நைட்ரஜனை வெளியிடும் நானோ உரத்துக்கான காப்புரிமையை, கோவை வேளாண் பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.நானோ உர கலவைகளை, இலைவழியே தெளிப்பதில் சிக்கல் இருந்தது. இச்சிக்கலுக்கு தீர்வு காண வேளாண் பல்கலை விஞ்ஞானிகள் முயன்றனர். இதன் விளைவாக, நேரடியாக மண்ணில் இடுவதற்கு ஏதுவான நானோ யூரியா உரத்தை, வேளாண் பல்கலை உருவாக்கியது.இத்தொழில்நுட்பத்தில், லிக்னின் சிட்ரிக் அமிலத்துடன் குறுக்கில் இணைக்கப்பட்ட யூரியா மூலக்கூறுகள் மற்றும் இயற்கை பாலிமர் கைடோசானுடன் இணைக்கும், ஒரு மேட்ரிக்ஸாக பயன்படுத்தப்பட்டன. உரத்தின் செயல்பாடு குறித்த ஆய்வில், சாதாரண யூரியாவின் நைட்ரஜன் வெளியீடு நான்கு நாட்களில் நின்று போனது.ஆனால், 33 சதவீத நைட்ரஜன் உள்ளடக்கம் கொண்டு, பல்கலையால் உருவாக்கப்பட்ட புதிய நானோ யூரியா, மண்ணில் 30 முதல் 35 நாட்கள் வரை, நீடித்த நைட்ரஜன் வெளியீட்டை உறுதி செய்தது.இத்தகைய நீடித்த ஊட்டச்சத்துகள் வெளியீடானது, ஊட்டச்சத்து இழப்பைக் குறைப்பதுடன், மேம்படுத்தப்பட்ட நைட்ரஜன் பயன்பாட்டுத் திறனுக்கும் பங்களிக்கும்.இந்தக் கண்டுபிடிப்பு செயல்முறையில், வேளாண் பல்கலை விஞ்ஞானிகள் லதா, சுப்பிரமணியன், ஜெயசுந்தர ஷர்மிளா ஆகியோர், பெரும் பங்காற்றினர். நைட்ரஜனை மெதுவாக, நீண்ட நாட்களுக்கு வெளியிடும் நானோ உரம் மற்றும் அதன் கண்டுபிடிப்பு செயல்முறைகளுக்கு, வேளாண் பல்கலைக்கு, சென்னை காப்புரிமை அலுவலகம், காப்புரிமை வழங்கியுள்ளது.