அரசின் மெத்தனப்போக்கால் கல்வித்தரம் பாதிப்பு: பன்னீர்
சென்னை: அரசு தொடக்கப்பள்ளிகளில், 2,200 தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு வருவதாக, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு, இரண்டு ஆண்டுகளாக நீதிமன்ற வழக்கு காரணமாக நடக்கவில்லை. இதுதொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனால், அரசு தொடக்கப் பள்ளிகளில், 2,200 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக செய்தி வந்துள்ளது. மேலும், ஆயிரக்கணக்கான ஆசிரியர், தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.தி.மு.க., அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு, இதைவிட ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இருக்க முடியாது. அரசுக்கு உண்மையிலேயே மாணவர்களின் கல்வி மீது அக்கறை இருந்திருந்தால், நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடித்து, காலிப்பணியிடங்களை நிரப்பி இருக்க வேண்டும். இதை செய்யாததால், நீதிமன்றத்தில், 20 முறைக்கு மேல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.தி.மு.க., அரசின் மெத்தனப்போக்கு காரணமாக, மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதோடு, ஆசிரியர்களுக்கும் கூடுதல் பணிச்சுமை அதிகரித்துள்ளது. யாருக்கு என்னவானாலும் நமக்கென்ன, அரசுக்கு செலவு குறைகிறதா என்ற எண்ணத்தில், அரசு செயல்படுகிறது. எனவே, வழக்கை விரைந்து முடித்து, அரசு பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.