முதல்வர் மனதை குளிர வைக்கும் டி.என்.பி.எஸ்.சி.,!
சென்னை: டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் முதல்வரை பாராட்டும் விதமாக கேட்கப்பட்டுள்ள கேள்வி விமர்சனங்களுக்கு ஆளாகி இருக்கிறது.அரசு வேலை என்பது ஒவ்வொருவரின் கனவு. அதற்கான போட்டித் தேர்வுக்காக இன்னமும் லட்சக்கணக்கானோர் இரவு, பகலாக தயாராகி வருகின்றனர். தேர்வர்களின் அறிவுத்திறன், சமயோசிதம், புத்திக்கூர்மை ஆகியவற்றை எழுத்துத் தேர்வு மூலமாக பரிசோதித்து போட்டியாளர்கள் டி.என்.பி.எஸ்.சி., பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.இந்நிலையில் நேற்றைய தினம் நடைபெற்ற குரூப் 2ஏ தேர்வில் கேட்கப்பட்டு இருக்கும் கேள்வி தான் இப்போது விமர்சனங்களுக்கு ஆளாகி இருக்கிறது. அதில் ஒரு கேள்வியில், தமிழ்நாட்டில், எந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியதற்காக முதல்வரை தாயுமானவர் என்று மக்கள் அழைக்கின்றனர் என்ற கேள்வி கேட்கப்பட்டு உள்ளது.அந்த கேள்விக்கான சரியான பதிலை தேர்வு செய்யுமாறு பள்ளியில் காலை உணவு, விடியல் பயணத்திட்டம், நீங்கள் நலமா, மக்களுடன் முதல்வர், விடை தெரியவில்லை என்று பதில்களும் தரப்பட்டு இருந்தன. இதில் எது சரியானது என்று தேர்வர்கள் நினைக்கிறார்களோ அதை தேர்வு செய்யவேண்டும்.இப்போது இந்த கேள்விதான் பூமராங் ஆக மாறி, டி.என்.பி.எஸ்.சி. செயல்பாட்டை கல்வியாளர்கள் உள்பட பலரும் விமர்சிக்க இடம்கொடுத்து இருக்கிறது. இதுகுறித்து கல்வியாளர்கள் கூறி இருப்பதாவது;அரசு வேலைக்கான போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் அறிவுத்திறனை சோதிக்கும் வகையில் கேள்வி இருக்க வேண்டும். ஆனால் இந்த கேள்வி முதல்வர் மனதை குளிர வைப்பதற்காக டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகளால் சேர்க்கப்பட்டு இருக்கிறதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. எதற்காக இப்படி ஒரு கேள்வி? அதற்கான தேவை என்ன?முதல்வரை திருப்திப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இப்படியான கேள்விகள் முன் வைக்கப்படுகின்றனவா என்பது தெரியவில்லை. எப்படி இருப்பினும், இதுபோன்ற கேள்விகளை இனி கட்டாயம் இடம்பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.