ரோஷன்புரா கிராமத்தினருக்கு டில்லி பல்கலை கவுரவம்
புதுடில்லி: வீர சாவர்க்கர் கல்லூரிக்கு இடம் நன்கொடையாக கொடுத்தவர்களை கவுரவிக்கும் விதமாக, நஜப்கர் ரோஷன்புரா கிராமத்தைச் சேர்ந்த மாணவ - மாணவியருக்கு, ஒவ்வொரு பாடத்திலும் தலா ஒரு இடத்தை டில்லி பல்கலை ஒதுக்கீடு செய்துள்ளது.இதுகுறித்து, டில்லி பல்கலை துணைவேந்தர் யோகேஷ் சிங் கூறியதாவது:டில்லி பல்கலை மேற்கு வளாகம் அருகே, 18,816.56 சதுர மீட்டர் பரப்பளவில் 140 கோடி ரூபாய் செலவில் வீர சாவர்க்கர் கல்லூரி கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகள் நிறைவடையும் நிலையில் இருக்கிறது.இங்கு கல்லூரி கட்டுவதற்கு நஜப்கர் ரோஷன்புரா கிராம மக்கள் பலர் தங்கள் நிலத்தை நன்கொடையாக வழங்கினர். இந்தக் கல்லூரி வளாகத்தில் 24 வகுப்பறைகள், எட்டு பயிற்சி அறைகள், ஆசிரியர்களுக்கு 40 அறைகள், துறை வாரியாக நூலகங்கள், மாநாட்டு அரங்கம் மற்றும் ஒரு உணவகம் அமைக்கப்பட்டுள்ளன.வீர சாவர்க்கர் கல்லூரியில் இந்தக் கல்வி ஆண்டில் இளங்கலை பட்டப் படிப்புகளான பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் அறிவியல் மற்றும் பி.பி.ஏ., ஆகிய படிப்புகள் துவக்கப்படுகின்றன. இந்த இரண்டு பாடங்களிலும் கல்லூரிக்கு இடம் கொடுத்த ரோஷன்புரா கிராமத்தைச் சேர்ந்த மாணவ - மாணவியருக்கு தலா ஒரு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். ஒவ்வொரு வகுப்பிலும் 60 பேர் சேர்க்கப்படுவர்.அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்தக் கல்லூரியில் துவக்கப்படும் ஒவ்வொரு வகுப்பிலும் இந்த இடஒதுக்கீடு தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.