உள்ளூர் செய்திகள்

கல்வித்துறை நாட்காட்டியில் தவறான தகவலால் குழப்பம்

சென்னை: பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள, 2025 - 26ம் ஆண்டுக்கான நாட்காட்டியில், பொங்கல் பண்டிகை, ஜன., 14 என தவறுதலாக குறப்பிடப்பட்டுள்ளது; இதை மாற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும், பள்ளி கல்வித்துறை சார்பில், கடந்த 13ம் தேதி, 2025 - 26ம் ஆண்டுக்கான நாட்காட்டி, இ - மெயில் வழியே அனுப்பப்பட்டுள்ளது.அந்த நாட்காட்டியில், 2026 ஜன., 14ம் தேதி பொங்கல் விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அன்று போகி பண்டிகை. மறுநாள்தான் பொங்கல் பண்டிகை. எனவே, நாட்காட்டியில் உள்ள தவறை, பள்ளி கல்வித்துறை திருத்தி, புதிய நாட்காட்டி வெளியிட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.இது குறித்து, திருக்கோவிலுாரை சேர்ந்த ஜோதிடர் பரணிதரன் கூறியதாவது:தமிழக அரசின் கல்வித்துறை, 2026ம் ஆண்டுக்குரிய விடுமுறை நாட்களை அறிவித்துள்ளது. அவற்றில் பொங்கல் விடுமுறை நாட்கள் குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவல் தவறாக உள்ளது.பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள நாட்காட்டியில், 2026 ஜன., 14 பொங்கல், 15ம் தேதி திருவள்ளுவர் தினம், 16ம் தேதி உழவர் திருநாள் என அறிவித்து, அன்று விடுமுறை என குறிப்பிட்டுள்ளது.இந்த அறிவிப்பு முழுமையாக தவறானதாகும். பொங்கல் பண்டிகை தை 1ம் தேதி கொண்டாடப்படும். அந்த வகையில், தை 1ம் தேதி, அடுத்த ஆண்டு ஜன., 15ல் வருகிறது. அதற்கு மறுநாள் திருவள்ளுவர் தினம். ஜன., 17 உழவர் தினமாகும்.இவற்றை சரி பார்க்காமல், தவறான தகவலை கல்வித்துறை அறிவித்திருப்பது, பல்வேறு குழப்பங்களுக்கு இடம் அளித்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தின் கடைசி நாள்தான் போகிப் பண்டிகை. எனவே, பள்ளி கல்வித்துறை நாட்காட்டியில் குறிப்பிட்டுள்ள, விடுமுறை நாட்களை மாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்