உள்ளூர் செய்திகள்

டிஜிட்டல் சாதனங்களால் சிறார்கள் பார்வை பாதிப்பு

பெங்களூரு: மொபைல் போன் போன்ற டிஜிட்டல் சாதனங்கள் பயன்படுத்துவதால், கண் பார்வை பாதிக்கப்படும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஒரே ஆண்டில் 1.72 லட்சம் சிறார்களுக்கு கண் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது.சமூக வலைதளங்களின் எண்ணிக்கை அதிகரித்த பின், மொபைல் போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. வீடியோக்கள் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். கொரோனா பரவிய காலத்தில், மாணவர்கள் ஆன்லைன் வழியாக கல்வி கற்றனர். இதற்காக மொபைல் போன், பயன்படுத்த துவங்கினர். அதுவே அவர்களுக்கு பழக்கமாகிவிட்டது.பள்ளி நேரம் போக, மிச்ச நேரத்தை மொபைல் போனில் செலவிடுகின்றனர். இதன் விளைவாக அவர்களின் கல்வித்திறன் மந்தமாவதுடன், பார்வையும் பாதிக்கப்படுவது, வல்லுநர்களின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.இது குறித்து, கண் மருத்துவ வல்லுநர்கள் கூறியதாவது:கர்நாடகாவில் கண் பார்வை பாதிப்பால் அவதிப்படும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரிப்பது, கவலைக்குரிய விஷயமாகும்.ஆரம்ப கட்டத்தில், நோய்களை கண்டுபிடித்து குணப்படுத்தும் நோக்கில், அங்கன்வாடிகள், பள்ளிகளில் சிறார்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. 2024ம் ஆண்டு 1.23 கோடி சிறார்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது கண் பரிசோதனையும் நடத்தப்பட்டது. பலருக்கு கண் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கபட்டது.கொரோனாவுக்கு பின், சிறார்கள் மொபைல் போன் போன்ற டிஜிட்டல் சாதனங்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதுவே அவர்களின் கண்பார்வை குறைபாடு ஏற்பட காரணமாகும். 2022ம் ஆண்டில், 98,000 பேருக்கு கண் பார்வை பாதிப்பு இருந்தது.இந்த எண்ணிக்கை 2023ம் ஆண்டில், 1.21 லட்சமாக அதிகரித்துள்ளது. தற்போது, 1.79 லட்சம் சிறார்கள், கண் பார்வை குறைபாட்டால் அவதிப்படுகின்றனர்.பார்வை குறைபாடுள்ள சிறார்களுக்கு, சிகிச்சை அளித்து கண்ணாடி வழங்கப்படுகிறது. பார்வை குறைபாடு இருந்தால், கல்வியில் பின்னடைவு ஏற்படும் என்பதால், சுகாதாரத்துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும், சிறார்களுக்கு கண் பரிசோதனை நடத்தப்படுகிறது.பிரச்னை உள்ளவர்களுக்கு, சுவர்ண சுரக்ஷா டிரஸ்ட்டில் பதிவு செய்துள்ள மருத்துவமனைகளில், இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. பார்வை குறைபாடு டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்துவது, வெளியே சென்று விளையாடுவது குறைந்துள்ளதாலும், சிறார்களுக்கு பார்வை குறைபாடு ஏற்படுகிறது.இதை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சை அளிக்காவிட்டால் அவர்களின் கல்வி பாதிக்கப்படும். எனவே பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்