அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆன்லைன் தேர்வு கட்டாயம்
புதுடில்லி: மருத்துவ அவசர நேரத்தில், பள்ளி மாணவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும் வகையில், அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆன்லைன் தேர்வு மற்றும் பயிற்சியை டில்லி மாநில அரசு வழங்குகிறது.டில்லியில், நேற்று துவங்கி, வரும் 19 வரை, 'முதலுதவி - சுகாதார அவசர காலங்களில் மனித உறவுகளை மேம்படுத்துவது அவசியம்' என்ற தலைப்பில், ஆன்லைன் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வு, ஒரு பயிற்சி போன்றதே. இந்த தேர்வில், ஆசிரியர்கள் அவசியம் பங்கேற்க வேண்டும். அனைவரும், குறைந்தபட்சம் தலா, 70 மதிப்பெண்களை பெற வேண்டும்.ஆன்லைனில் தேர்வு எழுதி முடித்து, தேர்ச்சி பெற்றதும், அதற்கான சான்றிதழையும், ஆன்லைனிலேயே பெற்றுக் கொள்ள முடியும்.இந்த பயிற்சியை, 'செர்ட்' எனும் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் ஏற்பாடு செய்துள்ளது. இந்த தேர்வை ஆசிரியர்கள் எழுதி தேர்ச்சி பெற்றதும், அவசர கால சிகிச்சை அளிக்கும் வகையில், ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றிருப்பர் என அந்த கல்வி கழகம் தெரிவித்துள்ளது.