தேர்வு மையத்தில் அலைபேசி பயன்படுத்த புதுக்கட்டுப்பாடு
தேனி: அரசு பொதுத்தேர்வு மையத்தில் அலைபேசி உபயோகிக்க புதுக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் 'ஆப்சென்ட்' மாணவர்கள் விபரங்கள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கல்வித்துறையினர் தெரிவித்தனர்.அவர்கள் கூறியதாவது:பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. தேர்வு மையங்களில் அலைபேசி பயன்பாட்டிற்கு புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. கடந்த ஆண்டுகளில் தேர்வு அறைகளுக்கு அறை கண்காணிப்பாளர்கள் அலைபேசி எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தேர்வு மைய பொறுப்பாளர்கள் அலைபேசி பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அவர்கள் தேர்வு அறைகளுக்கு செல்லும் போது மட்டும் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.தேர்வு மைய அலுவலகத்தில் இருந்து மாணவர்கள் வருகை பதிவு உள்ளிட்டவற்றை அதிகாரிகளுக்கு தெரிவிப்பர். ஆனால் இந்தாண்டு மைய கண்காணிப்பாளர்களும் அலைபேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பணிக்கு வந்துள்ள அறை கண்காணிப்பாளர், மைய கண்காணிப்பாளர், அலுவலர்கள் ஆகியோர் ஒரு அறையில் தங்கள் அலைபேசியை ஆப் செய்து வைத்து செல்ல வேண்டும்.அவசர தேவை என்றால் மட்டும் மைய கண்காணிப்பாளர் அவரது அலைபேசியை பயன்படுத்தலாம். அவ்வாறு அலைபேசி பயன்படுத்தும் போது அதற்கான பதிவேட்டில் அலைபேசி பயன்படுத்திய நேரத்தை குறிப்பிட உத்தரவிட்டுள்ளனர். இதனால் காலையில் வெளியாக வேண்டிய மாணவர்கள் 'ஆப்சென்ட்' பட்டியல் தேர்வு முடியும் வரை வெளியிடப்படவில்லை என்றனர்.