‘மதுரையில் விரைவில் டைடல் பார்க் துவக்கப்படும்’
மதுரை: “மதுரை இலந்தைகுளத்தில் விரைவில் டைடல் பார்க் துவங்க உள்ளது,” என எல்காட் மேலாண்மை இயக்குனர் சந்தோஷ்பாபு கூறினார். மதுரை இலந்தைக்குளத்தில் 28.91 ஏக்கரிலும், வடபழஞ்சியில் 245.17 ஏக்கரிலும் ‘எல்காட்’ சார்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து ‘ரோடு ஷோ’ என்ற நிகழ்ச்சியில் தொழில்நுட்ப பூங்காவின் வசதிகள், சலுகைகள் குறித்து தொழிலதிபர்களுக்கு விளக்கினர். பூங்காக்களுக்கு அழைத்துச் சென்றனர். நிகழ்ச்சிக்கு சி.ஐ.ஐ., தலைவர் அரவிந்த் தலைமை வகித்தார். ‘நாஸ்காம்’ மண்டல இயக்குனர் புருஷோத்தமன், துணை இயக்குனர் கதிர்காமன், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர் சிவராஜன் பங்கேற்றனர். எல்காட் மேலாண்மை இயக்குனர் சந்தோஷ்பாபு பேசியதாவது: தகவல் தொழில்நுட்ப துறையில், ஆறு மாதங்களுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது நல்ல முன்னேற்றம் உள்ளது. தற்போது நிறைய கம்பெனிகள் பூங்காக்களில் இடம் கேட்கின்றனர். மதுரை இலந்தைகுளத்தில் கட்டடம், அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. எல்காட் கட்டடத்தில் சதுர அடி 23 ரூபாய் வாடகை. மற்ற பகுதிகள் 99 ஆண்டு குத்தகைக்கு வழங்கப்படும். இலந்தைக் குளத்தில் ஒரு ஏக்கர் நிலம் 30 லட்சம் ரூபாய், வடபழஞ்சியில் 15 லட்சம் ரூபாய்க்கு வழங்கப்படும். வடபழஞ்சியில் ரோடு, காம்பவுண்ட் சுவர் கட்டப்பட்டுள்ளது. கட்டுமான பணி துவங்கவில்லை. அருகில் ரயில்வே மேம்பாலத்திற்கு 12 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப பூங்காவில் இடம் கேட்டவுடன் வழங்கப்படும். வடபழஞ்சியில் இதுவரை ஐந்து கம்பெனிகள் பதிவு செய்துள்ளன. முழுத்தொகையும் செலுத்திய சத்யம் நிறுவனம், தற்போது திரும்ப பெறுவதாக தெரிவித்துள்ளது. சிறப்பு பொருளாதார மண்டலத்தில் குறைந்தது 2000 சதுர அடியில் இடம் வழங்கப்படும். இதனருகில் உள்ள மற்ற இடங்களில் காற்றாலை, சோலார் எனர்ஜி நிறுவனங்களை அமைக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இங்கு பல நிறுவனங்கள் இடம் கேட்கின்றனர். தகுதியுள்ளவர்களுக்கு இடம் ஒதுக்கப்படும். இப்பூங்காக்களில் 100 சதுர அடிக்கு ஒருவருக்கு நேரடியாகவும், இருவருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். மதுரை இலந்தை குளத்தில் அனைத்து கட்டுமான பணியும் முடிந்துவிட்டது. விரைவில் துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, என்றார்.