உள்ளூர் செய்திகள்

கவுரவ விரிவுரையாளர்கள் தமிழகம் முழுவதும் ஸ்டிரைக்

அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ‘பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் உள்ள அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் நேற்று துவங்கிய போராட்டம் குறித்து, கவுரவ விரிவுரையாளர் சங்க மாநிலத் தலைவர் முத்துசாமி கூறியதாவது: தேர்தல் அறிக்கையில் கூறியது போன்று பணி நிரந்தரம் செய்யக் கோரி கடந்த மூன்று ஆண்டுகளாக கவுரவ விரிவுரையாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும், அரசு இதுவரை கோரிக்கையை ஏற்கவில்லை. கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த உள்ளிருப்பு உண்ணாவிரதப் போராட்டத்தையடுத்து, உயர்கல்வித் துறை முதன்மைச் செயலருடன் பேச்சு நடத்தி உடன்பாடு ஏற்பட்டது. ஆனால், அரசு அந்த உடன்பாட்டை அமல்படுத்தாமல், கவுரவ விரிவுரையாளர்கள் 170 பேரை பணி நீக்கம் செய்தது. அரசுப் பாடப்பிரிவாக மாற்றப்பட்ட வகுப்புகளுக்கு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் புதிய ஆசிரியர் நியமிக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. இதனால், கவுரவ விரிவுரையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணி பாதுகாப்பு, கால முறை ஊதியம் வழங்க வேண்டும்; பணி வரன்முறை செய்வதற்கான ஏற்பாடுகளை உடனடியாக துவங்க வேண்டும். பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள 170 கவுரவ விரிவுரையாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று(நேற்று) முதல் உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். தொடர்ந்து, மூன்று நாட்களுக்கு போராட்டம் நடக்கிறது. தமிழகத்தில் 20 கல்லூரிகளிலிருந்து 400க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 14 பேர் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அரசு நடவடிக்கையில்லையெனில், தொடர் போராட்டங்களில் ஈடுபட திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு முத்துசாமி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்