பல்கலை, கல்லூரி மாணவர்களுக்கு வாக்காளர் உறுதிமொழி
இம்மாதம் 25ம் தேதி கொண்டாடப்படவுள்ள தேசிய வாக்காளர் தினத்தின் ஒரு பகுதியாக, வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில், பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்களும் வாக்காளர் உறுதிமொழி ஏற்கவுள்ளனர். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தேர்தல் கமிஷன், தனது நிறுவன தினமான ஜனவரி 25ம் தேதியை நாடு முழுவதும், தேசிய வாக்காளர் தினமாக கொண்டாட முடிவு செய்துள்ளது. ஓட்டளிக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, அதன் மூலம் இந்திய ஜனநாயகத்தின் தரத்தை மேலும் வலுப்படுத்துவது ஆகிய நோக்கங்களுடன் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் வாக்காளர்களிடையே, குறிப்பாக இளைஞர்களிடையே ஓட்டளிப்பதில் பங்கேற்பது உள்ளிட்ட தேர்தல் நடைமுறைகளில் பங்கேற்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். 2010ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி கொண்டாடப்படவுள்ள முதலாவது தேசிய வாக்காளர் தினத்திலும், தொடர்ந்து வரும் ஆண்டுகளிலும், பல்வேறு நிலைகளில் நடக்கும் விழாக்களில் வாக்காளர் உறுதிமொழி ஏற்பை நடத்துவது என தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. மாநில அளவில் ராஜ்பவனில் ஜனவரி 25ம் தேதி காலை 11 மணிக்கு, வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும். இதில் மாநில கவர்னர் உறுதிமொழியை வாசகங்களை வாசித்து, உறுதிமொழியை ஏற்க வைப்பார். பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் மாணவர்கள் வாக்காளர் உறுதிமொழி ஏற்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, கல்லூரி முதல்வர்களுக்கு துணைவேந்தர் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். இதன்மூலம், இளைஞர்களிடையே குடிமகன் என்ற உணர்வும், தேர்தலில் பங்கேற்பதில் பெருமையும் ஏற்படும். இவ்வாறு பிரவீன்குமார் கடிதத்தில் கூறியுள்ளார். இதையடுத்து, 25ம் தேதி காலை 11 மணிக்கு, பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்கள், ‘ஜனநாயகத்தின் மீது இணங்கி நடக்கும் நம்பிக்கையுடைய இந்திய குடிமக்களாகிய நாம், நம் நாட்டின் ஜனநாயக மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலை நிறுத்துவோம் என்றும், மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், ஜாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு துõண்டுதலும் இன்றியும் ஓட்டளிப்போம் என்றும் உறுதிமொழிகிறோம்’ என வாக்காளர் உறுதிமொழி ஏற்கவுள்ளனர்.