சென்னை பள்ளி மாணவர்களுக்கான வொர்க் ஷாப்
சென்னை-ஐ.ஐ.டி., தமிழ்நாடு அறிவியல் கிளப்புகள் பெடரேஷன்(எப்.எஸ்.சி.டி) மற்றும் சென்னை கிறிஸ்டியன் கல்லூரி மேல்நிலைப் பள்ளி ஆகியவை இணைந்து, மாணவர்கள் தங்களின் எதிர்கால வேலையை தேர்ந்தெடுப்பதற்கு வழிகாட்டும் விதமாக 2 நாள் 'வொர்க் ஷாப்' நடத்த உள்ளன. "அறிவியல் மற்றும் பொறியியல் - ஒரு பயணம்" என்ற தலைப்பில் நடைபெறும் இந்த வொர்க் ஷாப், மாணவர்கள் தங்களின் எதிர்கால துறையை தேர்ந்தெடுப்பதில் பெரும் துணை புரியும் என்று சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிகழ்ச்சியின் மூலம், அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்கள் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்படும். ஐ.ஐ.டி-சென்னை -இலிருந்து பல பேராசிரியர்கள் இந்த வொர்க் ஷாப்பில் கலந்துகொண்டு, சம்பந்தப்பட்ட தலைப்புகளில் உரையாற்றி, அவற்றிலுள்ள வேலைவாய்ப்புகள் பற்றி விவரிப்பார்கள். பெற்றோர் மற்றும் சுற்றுவட்டத்தின் வற்புறுத்தலின் பேரில், என்னவென்று முழுதாக தெரியாமலேயே ஒரு மேல்நிலை படிப்பை மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் அவலத்தை போக்கி, புத்திசாலி மாணவர்கள் ஆராய்ச்சி செய்வதையே ஒரு தொழிலாக தேர்ந்தெடுக்கும் மனோநிலையை உருவாக்குவதும் இதன் நோக்கம் என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வொர்க் ஷாப் முக்கியமாக சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் படிக்கும் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கானது. இதில் பங்கேற்க எந்த கட்டணமும் இல்லை. இது சம்பந்தமான பிரவுச்சர்(தகவல் குறிப்பேடு) மற்றும் பதிவு படிவங்களை www.iitm.ac.in என்ற வலைதளத்திலிருந்து பள்ளிகள் பெறலாம். விண்ணப்ப படிவத்தின் நகலை, சென்னை கிறிஸ்டியன் கல்லூரி மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியருக்கு mcchshm@yahoo.co.in என்ற இ-மெயில் முகவரி மூலமாக, பிப்ரவரி 5 ஆம் தேதிக்கு முன்பாக அனுப்ப வேண்டும்.