உள்ளூர் செய்திகள்

பொறியியல் கல்லூரிகள் இணைப்பு முறையில் மாற்றம்

சென்னை: பொறியியல் கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக இணைப்பு வழங்குவதற்கான காரணிகளில், கல்லூரி பேராசிரியர்கள் விடைத் தாள் திருத்துவது உள்ளிட்ட பல்கலைக் கழக பணிகளில் பங்கேற்பதும், கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என, சென்னை அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. சென்னை அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக் கழக பதிவாளர் கவுரி, அப்பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும், தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சென்னை அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக் கழக தேர்வுகள், சமீபத்தில் நடந்து முடிந்தன. இத்தேர்வு விடைத் தாள்களை திருத்தும் பணியில் ஈடுபடவுள்ள பேராசிரியர்கள், அப்பணியை மேற்கொள்ள, பொறியியல் கல்லூரிகளின் முதல்வர்கள் அனுமதிக்க வேண்டும். விடைத் தாள் திருத்தும் பணி நடை பெறும் காலத்தில், அப்பணியில் ஈடுபட்டுள்ள பேராசிரியர்களுக்கு தேவையான, ‘ஆன் ஆபீஸ் டூட்டி’ வசதியை வழங்க வேண்டும். பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்குவதற்கான காரணிகளில், விடைத் தாள் திருத்தும் பணி உள்ளிட்ட பல்கலைக் கழக பணிகளில் கல்லூரிகளின் பங்களிப்பும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். விடைத் தாள் திருத்தும் பணிக்கு, எத்தனை பேராசிரியர்களை கல்லூரி அனுப்பியுள்ளது என்ற அடிப்படையில் கல்லூரிகளுக்குஇணைப்பு வழங்குவதில் முக்கியத்துவம் வழங்கப்படும். இவ்வாறு அக்கடிதத்தில், பதிவாளர் கவுரி கூறியுள்ளார். பல்கலைக் கழக விடைத் தாள் திருத்தும் பணிக்கு பேராசிரியர்களை அனுப்ப தனியார் கல்லூரி நிர்வாகங்கள் மறுத்து வருவதும், அரசு கல்லூரி ஆசிரியர்கள் அப்பணியில் ஆர்வம் காட்டாததும் தொடர் கதையாக இருந்து வருகிறது. கலை, அறிவியல் கல்லூரிகள் மட்டுமின்றி, பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வியிலும் இந்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பல சமயங்களில் விடைத் தாள் திருத்தும் பணி பாதிக்கப்பட்டு, தேர்வு முடிவுகளை உரிய நேரத்தில் வெளியிட பல்கலை சிரமப்படுகிறது. இப்பிரச்னையை எதிர் கொள்ள, கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்பப் பல்கலைக் கழகங்கள், விடைத் தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்களை பங்கேற்க வைப்பதற்காக இது போன்று பல்வேறு யுக்திகளை கடை பிடித்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்