உள்ளூர் செய்திகள்

விடைத்தாள் திருத்தும் பணி:தமிழாசிரியர் பற்றாக்குறையால் சிக்கல்

விருதுநகர்: பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.,21ல் துவங்கவுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கேற்றார் போல் தமிழாசிரியர்கள் பணி நியமனம் இல்லை. பல ஆண்டுகளாக பணியில் இருந்து பலர் ஓய்வு பெற்று வருவதால், குறைவான எண்ணிக்கையில் உள்ளனர். தமிழ்த் தேர்வில் முதல் தாள், இரண்டாம் தாள் இரு விடைத்தாள்களையும் திருத்தம் செய்ய வேண்டும். தேர்வு எழுதியது 8.5 லட்சம் பேர் எனில் தமிழ்த் தாள் மட்டும் 17 லட்சம் விடைத்தாள்கள் இருக்கும். இந்நிலையில் விடைத்தாள் திருத்தும் முகாமை குறிப்பிட்ட நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஒரு ஆசிரியர் ஒரு நாளுக்கு 15 விடைத்தாள் மட்டும் திருத்தம் செய்ய முடியும். முகாமை விரைந்து முடிக்க ஒரு நாளுக்கு 20 விடைத்தாள் திருத்தம் செய்யும்படி கூறுகின்றனர். மொழித்தாள்களில் ஆங்கில விடைத்தாள் பெரும் பிரிவு வினாக்கள் அடிப்படையில் திருத்தம் செய்யப்படுகிறது. தமிழ் முதல் தாளில் 22 முதல் 31 வினா, 48 முதல் 57 வரையும், இரண்டாம் தாளில் மொழி இலக்கணப்பயிற்சியில் 16 முதல் 35 வினாக்கள் ஒருமதிப்பெண் வினாக்கள். இந்த வினாக்களுக்கான மதிப்பெண்களை தனித்தனியாக தமிழாசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும். இதில் கால விரையம் ஏற்படுகிறது. ஆங்கில விடைத்தாள் போல, பெரும் பிரிவு விடைகளாக திருத்தம் செய்ய அனுமதிக்க வேண்டும். தமிழாசிரியர் கழக மாநில துணைத்தலைவர் இளங்கோ கூறுகையில், "ஒரு நாளுக்கு ஒரு ஆசிரியருக்கு 15 விடைத்தாள்களுக்கு மேல் வழங்கக் கூடாது. தமிழாசிரியர்களுக்கு நெருக்கடி கொடுத்தால் மாணவர்கள் பாதிக்கப்படலாம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்