உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் சேர்க்கையில் அரசு பள்ளிகள் மும்முரம்

முன்பெல்லாம் அனைவருமே அரசு பள்ளிகளில் தான் படித்து வந்தனர். சமீபகாலமாக அந்த நிலை மாறி, பணம் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை; குழந்தைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைப்பது என்ற மோகத்தில் பெற்றோர் இருந்தனர். இதனால், அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைந்தது. சில ஆண்டுகளாக தனியார் பள்ளிகளுக்கு நிகராக பல அரசு பள்ளிகளின் அடிப்படை வசதிகள் தரம் உயர்த்தப்பட்டன. கல்வித்தரமும் உயர்ந்து வருகிறது. இது பல பெற்றோர்களை கவர ஆரம்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் தனியார், நர்ஸரி, மெட்ரிக் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக சென்றாண்டு எழுந்த புகாரை அடுத்து, அரசே கட்டணம் நிர்ணயிக்க முடிவு செய்தது. பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளின் அடிப்படையில் அவை "ஏ, பி, சி, டி" எனத்தரம் பிரிக்கப்பட்டு, அதற்கேற்ப கட்டணம் நிர்ணயிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இவ்விவகாரத்தில் பல பள்ளிகள் தங்கள் இஷ்டத்துக்கு பள்ளிக்கட்டணம் வசூல் செய்தன. செலுத்திய தொகைக்கு ரசீதும் வழங்கவில்லை. பெற்றோர் அமைப்புகள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபடத் துவங்கின. போராட்டத்தில் தீர்வு ஏற்படாததாலும், விலைவாசி உயர்வாலும், தனியார் பள்ளியில் பயின்ற குழந்தைகளை, சத்தமில்லாமல் அரசு பள்ளிக்கு மாற்ற பெற்றோர் பலரும் ஆர்வத்துடனும் உள்ளனர். அரசு பள்ளிகள் மீதான மோகம் பெற்றோரிடம் அதிகரித்துள்ளன. வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க, கல்வித்துறை இப்போதே முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. "அரசு பள்ளியில், சமச்சீர் கல்வி முறை, மாணவர்கள் அனைவருக்கும் இலவச சீருடை, இலவச பாடப்புத்தகம், வாரத்தில் ஐந்து நாட்களுக்கு முட்டையுடன் சத்துணவு, "டிவி" மூலம் நீதிக்கதைகள், சி.டி., மூலம் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடல்கள் கற்றுத்தரப்படுகிறது. முதல் வகுப்பு முதல் ஆங்கிலப் பாடத்துக்கு சிறப்பு பயிற்சி, கம்ப்யூட்டர் பயிற்சி உள்ளது. சென்றாண்டைப் போலவே, நடப்பாண்டும், தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்கள் குறிப்பிட்ட விகிதத்தினர் அரசு பள்ளிக்கு மாறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்