பல்கலையை நிர்வகிக்க புதிய ஐவர் குழு
மதுரை: மதுரை காமராஜ் பல்கலை துணை வேந்தர் கற்பககுமாரவேல் பணிக்காலம் நிறைவடைந்துள்ளதால், பல்கலையை நிர்வகிக்க ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய, தேர்வு குழு உறுப்பினர்களாக செனட் பிரதிநிதி கோதண்டராமன், சிண்டிகேட் பிரதிநிதி நவநீதகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தலைவர் மற்றும் கவர்னர் பிரதிநிதியாக முன்னாள் துணை வேந்தர் ஜெகதீசன் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த அறிவிப்பு வெளியான பின் தேர்வுகுழுவினர் கூடி, புதிய துணை வேந்தர் பதவிக்கு மூன்று பேரை சிபாரிசு செய்வார்கள். அதில் ஒருவரை கவர்னர் நியமனம் செய்வார். புதிய துணைவேந்தர் பொறுப்பு ஏற்கும் வரையிலும் பல்கலையை நிர்வகிக்க உயர் கல்வித்துறை செயலாளர் கணேசன் தலைமையில் சிண்டிகேட் உறுப்பினர்கள் மதனகோபால், குணசேகரன், மனோகரன்,கணேசன் ஆகிய ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு செயல்பட பல்கலை வேந்தரான கவர்னர் பர்னாலா ஒப்புதல் அளித்துள்ளார்.