‘மென்திறன் படிப்புக்கு சர்வதேச தரத்தில் புத்தகம்’
சென்னை: “சென்னை பல்கலைக்கழகம், கனடா நாட்டின் தொலைதூரக் கல்வி மையத்துடன் இணைந்து 40 லட்ச ரூபாய் செலவில், மென்திறன் படிப்பிற்கு சர்வதேச தரத்திலான பாடப்புத்தகத்தை உருவாக்கும் பணியில் ஈடுபடவுள்ளது,” என சென்னை பல்கலைக் கழக துணைவேந்தர் ராமச்சந்திரன் தெரிவித்தார். சென்னை பல்கலைக் கழகத்தின் துணை பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 12ம் தேதி நடந்தது. சட்டத்தில் மூன்று பேர், மருத்துவத்தில் நான்கு பேர், பொறியியலில் மூன்று பேர், அறிவியலில் 121 பேர், கலைப்பிரிவில் 83 பேர், மேலாண் அறிவியலில், நான்கு பேர், வர்த்தகத்தில் பத்து பேர், ஆசிரியர் கல்வியில் நான்கு பேர் என மொத்தம் 232 பேருக்கு பி.எச்.டி., பட்டங்கள் வழங்கப்பட்டன. மத்திய ரயில்வே இணையமைச்சர் வேலு, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஐயர், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் உள்ளிட்ட 232 பேருக்கு பல்கலைக் கழக துணைவேந்தர் ராமச்சந்திரன் பட்டங்களை வழங்கினார். மேலும் பத்தாயிரத்து 117 பேருக்கு இள நிலை மற்றும் முதுநிலை பட்டங்கள் வழங்கப்பட்டன. பின்னர் நிருபர்களிடம் துணைவேந்தர் ராமச்சந்திரன் கூறியதாவது:சென்னை பல்கலைக் கழக தொலைதூரப் படிப்புகளுக்கு முன்தேதியிட்டு அனுமதி வழங்குவதற்காக, ‘இக்னோ’ இணைவேந்தர் லதா பிள்ளை தலைமையில் மூன்று பேர் கொண்ட தொலைதூரக் கல்விக் குழு கடந்த 11ம் தேதி சென்னை பல்கலைக் கழகத்தில் ஆய்வு நடத்தியது. மாணவர் சேர்க்கை, தேர்வு முறை, பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்த அக்குழுவினர் முழு திருப்தி தெரிவித்தனர். விரைவில் முன் தேதியிட்ட அனுமதி கிடைத்துவிடும். 2008-09ம் ஆண்டிற்கான அனுமதியை ஏற்கனவே பெற்றிருக்கிறோம். தொலைதூரக் கல்விக் குழுவிடம் ஒவ்வொரு ஆண்டும் அனுமதி வாங்க வேண்டும் என்பதை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை என மாற்ற கேட்டிருக்கிறோம். சென்னை பல்கலைக்கழகத்தின் சார்பில், 13 கோடி ரூபாய் செலவில், இணைய பல்கலைக்கழகம் அமைக்கப்படுகிறது. இதற்கு தேவையான அனைத்து உபகரணங்களும் டிசம்பர் மாதத்திற்குள் வந்துவிடும். இத்திட்டத்தில், பாடப் புத்தகங்கள் டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டு, இணையதளத்தில் வெளியிடப்படும். இப்பாடங்கள் ‘எஜூசாட்’ மூலமாகவும் ஒளிபரப்பப்படும். கனடா நாட்டின் தொலைதூரக் கல்வி மையத்துடன் இணைந்து 40 லட்சம் ரூபாய் செலவில் ‘மென்திறன்’ படிப்பிற்கான பாடப்புத்தகம் உருவாக்கும் பணியில் ஈடுபடவுள்ளோம். இப் பாடப் புத்தகம் சர்வதேச மாணவர்கள் பயன்படுத்தும் தரத்தில் உருவாக்கப்படவுள்ளது. இவ்வாறு ராமச்சந்திரன் கூறினார்.