உள்ளூர் செய்திகள்

போலி நிறுவனங்களை களையும் புதிய விதிமுறைகள்

பிரிட்டன் மாணவர்கள் விசா முறையில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய விதிமுறைகளை பிரிட்டனின் உள்துறை செயலர் தெரசா மே அறிவித்தார். பிரிட்டனின் இந்த புதிய விசா விதிமுறை மாற்றத்தினால், போலி கல்வி நிலையங்கள் களையப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரிட்டனின் உள்துறை அலுவலகத்தின் இணையதளத்தில்.. வெளியிடப்பட்டுள்ள புதிய விதிமுறைகளாவன, 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து, எந்த கல்வி நிலையமாவது, மாணவருக்கு உதவித் தொகை வழங்க விரும்பினால், அது மிகவும் நம்பகத்தன்மை மிக்க நிறுவனமாக இருக்க வேண்டும். இதனை அறிய சட்டப்படியான கல்வி ஆய்வாக அமைப்பு உதவித் தொகை வழங்கும் கல்வி நிலையத்தை ஆய்வு செய்யும். 2012 ஏப்ரல் முதல் இந்த நடைமுறை கட்டாயமாகிறது. இதன் மூலம், தரமற்ற கல்வி நிலையங்கள் உதவித் தொகை வழங்குவதை தடை செய்யலாம். பிரிட்டனுக்கு வந்து உயர் கல்வி பெற விரும்பும் வெளிநாட்டு மாணவர்கள் நிச்சயமாக ஆங்கிலத்தில் பேசும் திறன் பெற்றிருக்க வேண்டும். இதற்காக ஏற்கனவே நடைமுறையில் இருந்த விதிமுறையான, பள்ளி மேல் வகுப்பில் ஆங்கில வழியில் கற்றிருத்தல் வேண்டும் என்பது, பள்ளி இறுதி வகுப்பில் ஆங்கில வழியில் கற்றிருத்தல் வேண்டும் என்று மாற்றப்படுகிறது. பிரிட்டனின் எல்லை மைய அதிகாரிக்கு, வெளிநாட்டு மாணவரின் விசாவை ரத்து செய்யும் அதிகாரம் வழங்கப்படுகிறது. அதாவது, விசாவுடன் வரும் மாணவர், எந்த தடுமாற்றமும் இன்றி ஆங்கிலத்தில் பேசாமல் போனாலோ, குறைந்தபட்ச கல்வித்திறன் பெறாமல் இருந்தாலோ, அவர் பெற்றிருக்கும் விசாவை அதிகாரி ரத்து செய்யலாம். பல்லைக்கழகங்களில் மற்றும் பொது நிதியின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் மட்டுமே பகுதி நேர பணியில் ஈடுபடலாம். மற்ற எந்த மாணவரும், படிக்கும் போது பகுதி நேர பணி செய்ய தடை செய்யப்படுகிறது. பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் மற்றும் அரசின் உதவித் தொகையுடன் முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் மட்டுமே அவர்களுக்கென பணியாளரை அமர்த்திக் கொள்ளலாம். தற்போது, நீண்ட நாள் பயிலும் பாடப்பிரிவை எடுத்த மாணவர்கள் அனைவருமே பணியாளரை அமர்த்திக் கொள்ளலாம் என்று இருப்பது மாற்றப்பட்டுள்ளது. தற்போது மாணவர்கள் கல்வி பயில கால நிர்ணயமும் இல்லை. ஆனால், இனி இளநிலை பட்டப்படிப்பாக இருப்பின் 3 ஆண்டுகளும், முதுநிலை பட்டப்படிப்பாக இருப்பின் 5 ஆண்டுகளும் என மாணவர்களுக்கு கால நிர்ணயம் செய்யப்படுகிறது. டையர் 1 விசா முறையில், பிரிட்டனில் படித்து முடித்த மாணவர்கள், அங்கேயே 2 ஆண்டுகள் தங்கியிருந்து வேலை தேடலாம். இனி இந்த விசா முறை ரத்து செய்யப்படுகிறது. இனி, படிக்கும் காலத்தில், உதவித் தொகை அளித்த தொழிற்நிறுவனம், ஏற்றுக் கொண்டால், மாணவர் அந்த தொழிற் நிறுவனத்தில் பணியாற்றும் முறையான டையர் 2 விசா முறை மட்டும் நடைமுறையில் இருக்கும். பிரிட்டன் விசா முறையில் இனி இந்த புதிய விதிமுறைகளை பின்பற்றியே வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். இது குறித்து பல்வேறு கல்வியாளர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். கரியர்டிராக் இயக்குநர் ஷிவானி மண்சன்டா கூறுகையில், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் வாரத்தில் 20 மணி நேரம் பகுதிநேர பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், இனி தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பகுதி நேரமாக பணியாற்ற தடை விதிக்கப்படுகிறது. குளோபல் ரீச் மேலாண்மை இயக்குநர் ரவி லோசன் சிங் கூறுகையில், படிக்கும் போதே பணியாற்றும் வாய்ப்பு, வரும் 2012 முதல் ரத்து செய்யப்படுகிறது. இதனால், வரும் கல்வி ஆண்டில் இருந்து பட்டப்படிப்பில் சேர்ந்து பயிலும் மாணவர்கள், பகுதி நேரமாக பணியாற்ற முடியாது. சிறப்பு வாய்ந்த பாடப்பிரிவை எடுத்துப் படிக்கும் மாணவர்கள், படித்து முடித்ததும், நல்ல பணியில் சேர்ந்துவிடுவார்கள். ஆனால், பிஎச்.டி. பயில நினைக்கும் மாணவர்களுக்குத்தான் சிக்கல் ஏற்படும் என்று கூறினார். ஆங்கில மொழியை நன்கு அறிந்திருக்கும் மாணவர்கள் மட்டுமே பிரிட்டன் கல்வி நிலையங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இனி பிரிட்டன் விசா பெற ஆங்கில மொழி திறன் அறியும் தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும். இதனால் போலி நிறுவனங்கள், ஆங்கில மொழியில் திறன் பெறாத மாணவர்களை சேர்த்துக் கொள்வது தவிர்க்கப்படும் என்று ஷிவானி மண்சன்டா கூறினார். நல்ல கல்வி நிலையங்கள் ஏற்கனவே அதிக நம்பகத்தன்மை என்ற பெயரை பெற்றுள்ளன. இவை கல்வி நிலையங்களின் இணையதளத்தின் மூலமும் அறிந்து கொள்ளலாம். எனவே, நல்ல கல்வி நிலையமா என்பதை அறிந்து மாணவர்கள் சேர்க்கை பெறுவது மிகவும் அவசியமாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்