சமச்சீர் கல்வி பாடப்புத்தகத்தில் கருணாநிதியின் படைப்புகள்
மதுரை: சமச்சீர் கல்விமுறையில், இவ்வாண்டு அறிமுகமாகும் 10ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில், முதல்வர் கருணாநிதியின் படைப்புகள் இடம் பெற்றுள்ளன. சமச்சீர் கல்விமுறை கடந்த கல்வி ஆண்டில் 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு அறிமுகமானது. வரும் கல்வி ஆண்டில் மற்ற வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்த வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி நடப்பதுடன், மாவட்டங்களுக்கும் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. பத்தாம் வகுப்பு பாடப் புத்தகங்கள் அனைத்தும் சில நாட்களுக்கு முன், பள்ளிக் கல்வித் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதில், தமிழ் பாடப் புத்தகத்தில் முதல்வர் கருணாநிதியின் படைப்புகளும் இடம் பெற்றுள்ளன. தமிழ் பாடப்புத்தகத்தின் முதல் பக்க அட்டையில் தமிழக அரசு புதிதாக கட்டியுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகமும், கடைசி பக்கம் (வள்ளுவர் சிலையுடன் கூடிய) கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு முத்திரையும் இடம் பெற்றுள்ளன. மேலும் புத்தகத்தின் 4ம் பாகத்தில் முதல்வர் கருணாநிதி, கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி எழுதிய, "செம்மொழியான தமிழ் மொழியாம்" பாடல் இடம் பெற்றுள்ளது. 17ம் பக்கத்தில் செம்மொழி அறிவிப்பு முயற்சி மத்திய அரசால் 2004ல் ஏற்கப்பட்டது. இம்முயற்சி தமிழக முதல்வர் கருணாநிதியால் நிறைவுற்றது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதவிர, பக்கம் 89ல் கவிதை நூலுக்கு உரைநடை விளக்கம் பல உண்டு. சங்கத் தமிழுக்கும் உரைநடை விளக்கம் பல உள்ளன. ஆனால், கவிதை நடையில் விளக்கம் காண்பது அரிது. இதோ கண்ணகனார் பாடலுக்கு சங்கத்தமிழ் உரை என குறிப்பிட்டு, பாடல் ஒன்றுக்கு முதல்வர் கருணாநிதியின் சங்கத்தமிழ் கவிதை உரை இடம் பெற்றுள்ளது. புதிய கல்வித் திட்ட புத்தகங்கள் மாவட்டந்தோறும் அனுப்பி வைக்கப்படுகின்றன. அவை பள்ளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டியவை. தேர்தல் விதிகள் அமலில் உள்ளதால், அவற்றை இப்போதே பள்ளிகளுக்கு அனுப்பி மாணவர்களுக்கு வினியோகிக்க முடியாது. அதேசமயம் இணையதளத்தில் வெளியிடுவதில் பிரச்னை இல்லை என்பதால், அனைத்து பாடப்புத்தகங்களும் வெளியிடப்பட்டுள்ளன. தேர்தல் முடிவுகளுக்குப் பின் பாடப்புத்தகங்கள் வினியோகிக்கப்படும்.