உள்ளூர் செய்திகள்

இலவச தொழில்நுட்ப பயிற்சி அளிக்கும் அரசு

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் செயல்படுத்தும் இலவச தொழிற்கல்விக்கு மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிரதமரின் 15 அம்ச இலவச கல்வி திட்டத்தின்படி, சிறுபான்மையினருக்காக பல்வேறு தொழில்நுட்ப பாடப் பிரிவுகளில் பயிற்சி அளிக்கும் திட்டத்தை சிறுபான்மையினர் மேம்பாட்டு அமைச்சகம் கடந்த 6 ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது. ஐ.டி., வணிக மேம்பாட்டுக் கல்வி, போட்டித் தேர்வுகளை எழுத மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பது போன்றவையும் இந்த திட்டத்தின் கீழ் அடங்கும். இந்த பயிற்சியை கொடுக்க சிறுபான்மையினர் அமைச்சகம், தனியார் கல்வி நிலையங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அதில் தேர்வாகும் கல்வி நிலையங்களுக்கு, மத்திய அரசு நிதி ஒதுக்கி, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கும். சமுதாயத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கும், சிறுபான்மையினருக்கும் இந்த இலவச பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியின் மூலம், இவர்கள், தனியார் தொழில் நிறுவனங்களிலும், அரசு பணிகளிலும் பணியாற்றும் அளவிற்கு தகுதி பெற வேண்டும் என்பதே இந்த இலவச பயிற்சியின் நோக்கமாகும். இந்த இலவசப் பயிற்சியைப் பெற விரும்பும் மாணவர்கள், இதற்காக நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெற்று நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும். அரசு கல்வி நிலையங்களும், நிகர்நிலை மற்றும் பல்கலைக்கழகங்களும், தனியார் கல்வி நிறுவனங்களும் இந்த பயிற்சியை அளிக்க விண்ணப்பிக்கலாம். ஒரு மாணவருக்கு இந்த திட்டத்தின் கீழ் ஒரு பயிற்சி மட்டுமே அளிக்கப்படும். மே மாதம் 31ஆம் தேதிக்குள் மாணவர்கள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். 2006ஆம் ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங், இந்த இலவச திட்டத்தைத் துவக்கி வைத்தார். அந்த ஆண்டு முதலே இத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஏராளமான சிறுபான்மையின மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்