கற்றல் சவாலில் திறனை வெளிப்படுத்திய 10 பள்ளிகளுக்கு அமைச்சர் பாராட்டு
உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியத்தில் கற்றல் சவாலில் திறனை வெளிப்படுத்திய 10 பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ், பாராட்டி சிறப்பு விருதுகளை வழங்கினார்.தமிழகத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் பயிலும், மாணவர்களின் கற்றல் திறனை 100 நாளில் வெளிப்படுத்த, பள்ளி கல்வித்துறை கடந்தாண்டு அழைப்பு விடுத்து இருந்தது. அதற்கு தொடக்கப் பள்ளிகள் அரசிற்கு 100 நாளில் கற்றல் திறனை வெளிப்படுத்துவோம் என்று சவால் விட்டிருந்தனர்.அதன்படி, உத்திரமேரூர் ஒன்றியத்தில் உள்ள 123 தொடக்கப் பள்ளிகளில், கடந்த ஏப்ரல் மாதம் 1 முதல், 5ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கில வார்த்தைகளை அடையாளம் காணுதல், கூட்டல், கழித்தல் ஆகியவை, வகுப்புக்கு 5 மாணவர் வீதம் கற்றல் திறன் சோதிக்கப்பட்டது.அதில், வாடாநல்லுார், காவனுார் புதுச்சேரி, அம்மையப்பநல்லுார், மேல்பாக்கம், அனுமந்தண்டலம், இடையம்புதுார், புலிப்பாக்கம், மாம்பாக்கம், காட்டாங்குளம், ஆனம்பாக்கம் ஆகிய 10 பள்ளிகள் கற்றல் சவாலை சிறப்பாக வெளிப்படுத்தியதாக தேர்வு செய்யப்பட்டது.இந்நிலையில், மாநில அளவில் சிறந்து விளங்கிய பள்ளிகளுக்கு பள்ளி கல்வித் துறை சார்பில், திருச்சியில் பாராட்டு விழா நேற்று நடந்தது. அப்போது, உத்திரமேரூர் ஒன்றியத்தில் தேர்வு செய்யப்பட்ட 10 பள்ளி தலைமையாசிரியர்களை, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் மகேஷ், பாராட்டி சிறப்பு விருதுகளை வழங்கினார்.