உள்ளூர் செய்திகள்

குழந்தைகள் தின விழா ஓவியப்போட்டி: 1,000 மாணவர்கள் பங்கேற்பு

சென்னை: குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கு சென்னையில் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. பள்ளி மாணவர்களின் ஓவியத் திறனை வெளிப்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, சென்னை நியூ சன் பிளவர் டிரஸ்டும், எக்ஸ்னோரா ஸ்போர்ட்ஸ் கிளப்பும் இணைந்து ஓவியப் போட்டிகளை நடத்தி வருகின்றன. இவ்வாண்டுக்கான ஓவியப் போட்டி, நவ., 9ம் தேதி நடத்தப்பட்டது. சென்னை மேற்கு மாம்பலம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடந்த இப்போட்டியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். மாணவர்கள் விருப்பத்திற்கு ஏற்ற ஓவியங்களை வரையலாம் என அறிவிக்கப்பட்டது. எல்.கே.ஜி., முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலும், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையும், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலும் என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு மணி நேரம் வழங்கப்பட்டது. ஒவ்வொரு வகுப்புக்கும் ஒன்று முதல் ஐந்து சிறந்த ஓவியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. ஒரே நேரத்தில் தனது இரண்டு கைகளிலும் ஓவியம் வரைந்து சாதனை படைத்துவரும் ஓவியர் முருகன், நடுவராக இருந்து மாணவர்கள் வரைந்த சிறந்து ஓவியங்களை தேர்வு செய்தார். தேர்வு செய்யப்பட்ட 70 மாணவர்களுக்கு கமலா தியேட்டர் உரிமையாளர் வள்ளியப்பன், அரிமா சங்க வைரசேகர் ஆகியோர் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர். இதற்கான ஏற்பாடுகளை சென்னை நியூ சன் பிளவர் டிரஸ்டும், எக்ஸ்னோரா ஸ்போர்ட்ஸ் கிளப்பும் செய்திருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்