உள்ளூர் செய்திகள்

திருநங்கையர் உயர்கல்வி பயில மாதம் ரூ.1,000 நிதி உதவி

திருவள்ளூர்: திருநங்கையர் உயர்கல்வி பயில, கல்வி செலவு மற்றும் மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:புதுமைப் பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தில் பயன்பெற ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் பயின்று, உயர்கல்வி பயிலும் மாணவ - மாணவியருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை திருநங்கை, திருநம்பி மற்றும் இடைபாலினர் உள்ளிட்ட அனைத்து திருநங்கையரும் உயர்கல்வி பயில்வதற்கு, நடப்பு கல்வியாண்டு முதல் நீட்டிக்கப்பட்டுள்ளது.மேலும், அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் பயின்றவர் என்ற கட்டுப்பாடு, திருநங்கையருக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வை திருநங்கையருக்கு தெரியப்படுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்வி கட்டணம் உள்ளிட்ட அனைத்து கல்வி செலவையும், தமிழ்நாடு திருநங்கையர் நல வாரியத்தின் மூலமாக வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, திருநங்கையர் அனைவருக்கும் அனைத்து கட்டணங்களையும் அரசே ஏற்கும்.மேலும், தகவலுக்கு மாவட்ட சமூக நல அலுவலரை, 044 - 2989 6049 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்