அரசு கல்லுாரி கேம்பஸ் இன்டர்வியூ 181 மாணவ, மாணவியர் தேர்வு
திருவொற்றியூர்: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த வளாக வேலைவாய்ப்பு நேர்காணலில், 181 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.திருவொற்றியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 750க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.இங்கு, கல்லுாரி படிப்பை முடித்த மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம், கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது. கல்லுாரி நிர்வாகம் - மேஜிக் பஸ் நிறுவனம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட, வேலைவாய்ப்பு முகாமில், விப்ரோ, வி 4 யு உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் சார்பில் நடத்தப்பட்ட நேர்காணலில், முன்னாள் மாணவர்கள் உட்பட, 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.அதன்படி, நேர்காணலில் பங்கேற்ற மாணவர்களில், இளங்கலை வணிகவியல் மாணவியர் ராஜஸ்ரீ, விஜயலட்சுமி, யோக பிரியா, இளங்கலை ஆங்கில பாடப் பிரிவு மாணவி சரஸ்வதி, மாணவர் முகமது ஜமீர் உட்பட, 181 பேரை நிறுவனங்கள் தேர்வு செய்தன.இதில், தேர்வான மாணவ, மாணவியருக்கு பணி ஆணையை, கல்லுாரி முதல்வர் விஜயா, பேராசிரியர் சீனிவாசன், வேலைவாய்ப்பு அதிகாரிகள் புனிதகுமாரி, தாட்சாயிணி, பவித்ரா, நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளர் பத்மபிரியா மற்றும் தனியார் நிறுவன அதிகாரிகள் வழங்கினர்.