உள்ளூர் செய்திகள்

‘இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் 20 சதவீதம் பேர்’

கோவை: இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் 20 சதவீதம் பேர் வசிக்கின்றனர்,”, என தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி பேசினார். கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில், ‘வறுமை ஒழிப்பில் நீர்வடிப்பகுதி சமூக அமைப்புகள் மற்றும் சுய உதவிக்குழுக்களின் பங்கு’ என்ற தலைப்பிலான கருத்தரங்கு, நடந்தது. இதில் மாநில திட்டக்குழு நிலப்பயன்பாடுத்துறை தலைவர் ஜெயந்தி முரளி பேசியதாவது: விற்பனை மற்றும் வருமானத்தை வைத்து மட்டுமே, சுய உதவிக்குழு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று கூறமுடியும். ஏஜென்ட்கள் பொருட்களை எடுத்துக் கொள்வதாக கூறினால் மட்டுமே பொருட்கள் உற்பத்தி செய்ய துவங்க வேண்டும். தமிழ்நாடு காடுகள் அபிருவித்தி திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு சில சுய உதவிக்குழுக்கள் வசம் ஒப்படைக்கப்பட்டன. அவர்களுக்கு கடன் வசதியும் செய்து தரப்பட்டன. ஆனால், இத்திட்டத்தை சுய உதவிக்குழுவினர் நிலையாக செயல்படுத்தவில்லை. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் செயல்படும் சுய உதவிக்குழுக்கள், திட்டக்காலம் முடிந்தபின்னும் திட்டப்பணிகளை தொடர்ந்து செயல்படுத்துவதும் பராமரிப்பதும் அவசியம். இந்த ஒருநாள் கருத்தரங்கின் மூலம் சுய உதவிக்குழுக்கள், நிலையாக செயல்படவும், விற்பனை மற்றும் வருமானம் நிலைத்து இருக்கவும், உண்டான வழிமுறைகளை பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு ஜெயந்தி முரளி பேசினார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலை துணைவேந்தர் ராமசாமி பேசுகையில், “நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டங்கள், இந்தியாவில் உள்ள மானாவாரி வேளாண்மை மேம்பாட்டிற்கு மிகவும் அவசியம். குறிப்பாக வறட்சியின் தாக்கத்தை குறைக்க இயற்கை வளங்களை பேணிக்காப்பது, வேலைவாய்ப்பை அதிகரிப்பது மற்றும் மனிதவளத்தை மேம்படுத்துவது, சுற்றுச்சூழலை பராமரிப்பது உள்ளிட்ட பணிகள் செயல்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் இன்றளவிலும் 20 சதவீதம் பேர், வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர். இந்நிலையை மாற்ற தற்போது வறுமை ஒழிப்பு திட்டம் அதிகளவில் செயல்படுத்தப்படுகிறது,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்