ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்.,களில் 3,000 பணியிடங்கள் காலி
மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சக வட்டாரங்கள் வெளியிட்டுள்ள தகவல்: ஐ.ஐ.டி.,க்கள் மற்றும் தேசிய தொழில்நுட்ப மையங்களில், மூன்றில் ஒரு பங்கு ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்திய அறிவியல் மையங்களில், தேவையான ஆசிரியர்களில் பாதியளவு ஆசிரியர்கள் கூட இல்லை. திட்டம் மற்றும் கட்டடக்கலை சார்ந்த கல்வி மையங்களிலும், இதே நிலையே நீடிக்கின்றன.மத்திய அரசு நிதியுதவி பெறும், பெரும்பாலான தொழில்கல்வி மையங்களில் போதியளவு ஆசிரியர்கள் இல்லை.இவ்வாறு அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது. மும்பை ஐ.ஐ.டி.,யின் பணியாளர்கள் விவகாரத்துறை தலைவர் ஏ.கே.சுரேஷ் கூறுகையில், ஒவ்வொரு துறையிலும், காலி பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் கிடைக்கும் போது, அவர்களை பணி நியமனம் செய்கிறோம். மேலும், காலிப் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில், உடனுக்குடன் ஆசிரியர்களை நியமிக்கிறோம் என்றார்.வரும் 2014ம் ஆண்டு, மும்பை ஐ.ஐ.டி.,யில் அதிகபட்சமாக 8,000 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். அதற்குள், போதியளவு மாணவர்கள் ஆசிரியர்கள் வீதத்தை உறுதிப்படுத்த வேண்டும்.இதே போன்று, இந்திய அறிவியல் மையங்களிலும், ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இவ்வாறு, மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும், கல்வி மையங்களில் திறமையான ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவது குறித்து நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.