இலவச பயிற்சி வகுப்பு மூலம் 351 பேர் அரசு பணிக்கு தேர்வு
சேலம்: சேலம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், டி.என்.பி.எஸ்.சி., சீருடை பணியாளர், மருத்துவ பணியாளர் போன்ற தேர்வு வாரியம் அறிவிக்கும் போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. கடந்த மூன்றாண்டில் பல்வேறு தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்ட, 12 வித போட்டி தேர்வில், 1,574 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றதில், 351 பேர் தேர்ச்சி பெற்று, பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.மேலும், வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், 2,222 பேருக்கு, 3.25 கோடி ரூபாய்உதவித்தொகை, 38 தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தி, 12,307 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளன. தவிர, விர்ச்சுவல் லேனிங் போர்ட்டல் என்ற இணையதளம் மூலமாக, பல்வேறு போட்டி தேர்வுக்கான மென்பாட குறிப்பு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.அத்துடன் பாட வாரியான மாதிரிதேர்வு, நேர்முக தேர்வு நடத்தி, உளவியல் ரீதியான பயிற்சி அளிக்கப்படுகிறது. குறிப்பெடுத்து படிக்க வசதியாக, 2,000க்கும் மேற்பட்ட போட்டி தேர்வு புத்தகம், மாத, வார இதழ், தினசரி நாளிதழ் கொண்ட நுாலகம் தனியாக செயல்படுகிறது. இந்த வாய்ப்பை மாணவ, மாணவியர் பயன்படுத்தி கொள்ளும்படி, கலெக்டர் பிருந்தாதேவி கேட்டு கொண்டுள்ளார்.