அண்ணா பல்கலை உறுப்பு கல்லுாரிகளில் 351 இடங்களை நிரப்ப அறிவிப்பாணை
சென்னை: அண்ணா பல்கலை உறுப்பு கல்லுாரிகளில், 351 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, வரைவு அறிவிப்பாணையை நாளை தாக்கல் செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2010 -11ம் ஆண்டில், அண்ணா பல்கலை உறுப்பு கல்லுாரிகளில், ஒப்பந்த அடிப்படையில் உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதற்கிடையில், புதிதாக தற்காலிக ஆசிரியர்கள் தேர்வுக்கு அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து, தங்களை நிரந்தரம் செய்யவும், புதிய அறிவிப்பை எதிர்த்தும், தற்காலிக உதவி பேராசிரியர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இம்மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனுக்கள், நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.குமரேஷ் பாபு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது பிறப்பித்த இடைக்கால உத்தரவு:ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழு விதிகளின்படி, உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் மற்றும் பேராசிரியர் என 1,745 ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால், 1,189 இடங்கள் குறைவாக உள்ளன.அண்ணா பல்கலை ஒப்புதல் அளித்ததன் அடிப்படையில் பார்த்தால், 425 இடங்கள் காலியாக உள்ளன. இவ்வளவு காலியிடங்களை வைத்து, அண்ணா பல்கலையும், அதன் உறுப்பு கல்லுாரிகளும் எப்படி இயங்குகின்றன என்பதற்கு, பல்கலை பதிவாளர் விளக்கம் அளிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.இதையடுத்து, வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், சி.குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அண்ணா பல்கலை பதிவாளர் தரப்பில் தாக்கல் செய்த அறிக்கையை பரிசீலித்த பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:நேரடி தேர்வு வாயிலாக, 351 உதவி பேராசிரியர் காலியிடங்களை நிரப்ப, விண்ணப்பங்களை வரவேற்பதற்கான வரைவு அறிவிப்பாணை தயாராக இருப்பதாக, அண்ணா பல்கலை தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். தற்காலிக அடிப்படையில் பணிபுரிபவர்களுக்கு, எப்படி, வெயிட்டேஜ் வழங்கலாம் என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும். உறுப்பு கல்லுாரிகளில் காலியாக உள்ள, 351 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, அறிவிப்பாணை வெளியிடப்பட வேண்டும். அதற்கான வரைவு அறிவிப்பாணையை தயார் செய்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய, பல்கலை தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. எனவே, விசாரணை வரும் 12க்கு தள்ளி வைக்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.