டில்லியில் சுயசார்பு இந்தியா பேச்சரங்கம் 45 மாணவர்கள் வழியனுப்பி வைப்பு
சென்னை: மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால், தேசிய இளைஞர் தினமான வரும் 12ல், டில்லியில் நடக்க உள்ள பேச்சரங்கத்துக்கு, தமிழகம், புதுச்சேரியில் இருந்து தேர்வான 45 மாணவர்களுக்கு தேநீர் விருந்தளித்து, கவர்னர் ரவி வழியனுப்பினார்.விவேகானந்தர் பிறந்த நாளை, தேசிய இளைஞர் தினமாக, மத்திய அரசு கடைபிடிக்கிறது. அந்த நாளில், இளைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில், மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளையும் போட்டிகளையும் நடத்துகிறது.அதன் ஒரு பகுதியாக, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையின் கீழ் செயல்படும் நேரு யுவகேந்திரா சங்கதன் சார்பில், டில்லி, பாரத் மண்டபத்தில், பிரதமர் மோடியின் முன்னிலையில், சுயசார்பு இந்தியா என்ற தலைப்பில் பேச்சரங்கம் நடக்க உள்ளது.அதில் பங்கேற்க, தமிழகம், புதுச்சேரியில் இருந்து 45 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களை, நேரில் அழைத்து தேநீர் விருந்தளித்த கவர்னர் ரவி, அவர்களுடன் உரையாடினார். பின், அவர்களை வாழ்த்தி வழியனுப்பினார்.இதுகுறித்து, தமிழகம், புதுச்சேரி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை இயக்குனர் செந்தில்குமார் கூறுகையில், 10 தலைப்புகளில், மூன்று கட்டங்களாக நடந்த போட்டிகள் வாயிலாக, இந்த 45 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டனர், என்றார்.