உள்ளூர் செய்திகள்

அரசு கல்லூரி விடுதி மாணவியர் 48 பேர் மயக்கம்

ஆத்தூர்: ஆத்தூர் அருகே, வடசென்னிமலை அரசு கல்லூரி விடுதியில், உப்புமா சாப்பிட்ட மாணவியர், 48 பேர், தேர்வு மையத்தில், அடுத்தடுத்து வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, வடசென்னிமலையில், அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில், ஆத்தூர், கெங்கவல்லி பகுதி மட்டுமின்றி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த, 2,600 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். கல்லூரி வளாகத்தில், எஸ்.சி.,எஸ்.டி., மற்றும் பி.சி.,எம்.பி.சி., மாணவ, மாணவியருக்கு, தனித் தனியே, நான்கு விடுதிகள் உள்ளன. இதில், எஸ்.சி., விடுதியில், மொத்தம், 53 மாணவியர் தங்கி படிக்கின்றனர். நேற்று முன்தினம், இரவு, சாப்பாடு, முள்ளங்கி சாம்பார், ரசம் ஆகியவை, 48 மாணவியருக்கு வழங்கப்பட்டது. சில மாணவியருக்கு, இரவு வயிற்று போக்கு, மயக்கம் ஏற்பட்டதால், முதலுதவி சிகிச்சை அளித்து, மருந்து, மாத்திரை கொடுத்துள்ளனர். நேற்று, காலை ,8 மணியளவில், 48 பேருக்கு, உப்புமா, சட்னி உணவாக வழங்கப்பட்டது. காலை, 11 மணியளவில், கல்லூரியில் மாதிரி தேர்வு எழுதி கொண்டிருந்த, விடுதி மாணவியர், அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர், சிலருக்கு வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டது. அதையறிந்த கல்லூரி நிர்வாகம், ஆம்புலன்ஸ் மூலம், மாணவியர், 48 பேரை, ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆத்தூர், ஆர்.டி.ஓ., ஜெயச்சந்திரன், தாசில்தார் மனோகரன் உள்ளிட்ட அலுவலர்கள், நேரில் ஆய்வு செய்து, மாணவியரின் உடல் நலம் குறித்து, விசாரித்தனர். கல்லூரி விடுதி வார்டன் கனகவள்ளியிடம், வருவாய்த்துறையினர், விசாரணை நடத்தினர். அதன்பின், கல்லூரி வளாகத்தில் உள்ள, நான்கு விடுதிகளிலும், உணவு பொருட்களை ஆய்வு செய்து, தரமான முறையில் உணவுசமைத்து வழங்க வேண்டும் என, அறிவுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்