ராகிங் செய்த மாணவிகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம்
அலகாபாத்: உத்தர பிரதேசத்தில் ராகிங் செய்த பி.டெக்., மாணவிகள் 19 பேருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உ.பி.,யின் அலகாபாத் நகரில் உள்ள ஐ.ஐ.டி.,யில் பி.டெக்., இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவிகள் பலர், கல்லூரி விடுதியில் தங்கியிருந்தனர். கடந்த 19ம் தேதி, புதிதாக சேர்ந்த கல்லூரி மாணவிகளை, சீனியர் மாணவிகள் 19 பேர் ராகிங் செய்துள்ளனர். இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர், கல்லூரி நிர்வாகத்திடம் புகார் செய்தனர். இதையடுத்து, 19 மாணவிகளுக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதை அவர்கள் அடுத்த மாதம் 14ம் தேதிக்குள் கட்ட வேண்டும். மேலும், இந்த மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஸ்காலர்ஷிப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐ.ஐ.டி., இயக்குனர் எம்.டி.திவாரி கூறியதாவது: ராகிங் செய்யும் மாணவர்களை கடுமையாக தண்டிக்கும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ராகிங் செய்யும் மாணவர்களுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க கோர்ட் அனுமதியளித்துள்ளது. எங்கள் கல்லூரியில் ராகிங் செய்த மாணவிகளில் பலர் ஏழ்மையில் உள்ளவர்கள் தான். இருந்தாலும் இந்த தவறு மீண்டும் நடக்கக் கூடாது என்பதற்காக நாங்கள் கண்டிப்பாக இருக்கிறோம். ஜூனியர் மாணவர்களை ‘சார், மேடம்’ என அழைக்கும்படி சீனியர்கள் கூறினாலும் அது கூட ராகிங் செய்ததாகத் தான் அர்த்தம் என, சுப்ரீம் கோர்ட் விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. ராகிங் செய்த மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு, அவர்கள் மீது போலீஸ் நிலையத்தில் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்படவில்லை. இவ்வாறு திவாரி கூறினார்.