புதிய வழக்கறிஞர்களுக்கான தகுதித்தேர்வு மார்ச் 6-ல் நடைபெறும்
சட்டப் படிப்பை முடித்தவர்கள், இந்திய நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களாக பயிற்சி பெறும் தகுதியை நிர்ணயிப்பதற்கான பொது எழுத்துத் தேர்வு இந்தாண்டு முதல் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் அடிப்படையில், சட்டத்துறையை சீர்திருத்துவதற்கான முயற்சிகளில் ஒன்றாக நடத்தப்படும் இந்த தேர்வு தகுதியான வழக்கறிஞர்களை கண்டறிவதற்கான ஒரு முயற்சியாக கருதப்படுகிறது. இந்திய பார் கவுன்சிலால்(பி.சி.ஐ) நடத்தப்படும் இந்த தேர்வானது, மொத்தம் 10 இந்திய மொழிகளில், நாடு முழுவதும் 27 மையங்களில் நடத்தப்படுகிறது. தேர்வெழுதுபவர்கள் தங்களின் அனுமதி அட்டைகளை(அட்மிட் கார்ட்) பிப்ரவரி 15 முதல் பெறலாம் என்று பி.சி.ஐ. அறிவித்துள்ளது. இந்த தேர்வு கடந்தாண்டு டிசம்பர் 5 ம் தேதியே நடத்தப்படுவதாக இருந்தது. ஆனால் சில மாநிலங்களின் பார் கவுன்சில்கள் மற்றும் சட்ட அமைச்சகங்களிடமிருந்து சில எதிர்ப்புகள் வந்ததையடுத்து, மார்ச் 6 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மொத்தம் 3.5 மணி நேரங்கள் நடக்கும் இந்த தேர்வில் பலவித விருப்பக் கேள்விகள் கேட்கப்படும். சரியான பதிலை டிக் செய்ய வேண்டும். மேலும் தேர்வெழுதுபவர்கள் ரெபரன்ஸ் புத்தகங்களை பயன்படுத்தவும் அனுமதிக்கப்படுவார்கள். இத்தேர்வில் வெற்றிபெற குறைந்தது 40% மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். இவ்வாண்டு முதல் வருடத்திற்கு 2 முறை நடக்கும் இந்த தேர்வில் ஒருவர் தகுதிபெறும் வரை, எத்தனைமுறை வேண்டுமானாலும் எழுதலாம். கடந்த 2009-10 கல்வியாண்டு முதல் அதற்கு பிறகான ஆண்டுகளில் சட்டப் படிப்பை முடிப்பவர்கள் மட்டுமே இதை எழுத வேண்டும். ஆனால் அதற்கு முன்பாக முடித்தவர்கள்(அவர்கள் பி.சி.ஐ -இல் பதிவு செய்யாமல் இருந்தாலும் கூட) இத்தேர்வை எழுத வேண்டியதில்லை என்று பி.சி.ஐ. தெரிவிக்கிறது.