அனுமதி இல்லாத காப்பகத்தில் தங்கியிருந்த 64 மாணவ, மாணவியர் மீட்பு
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில், அனுமதி இல்லாமல் நடத்தப்பட்டு வந்த, இரண்டு காப்பகத்திலிருந்து, மாணவ, மாணவியர் 64 பேர் மீட்கப்பட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில், ஆங்காங்கே, காப்பகங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், இங்கு, பள்ளி மாணவ, மாணவியரை தங்கி படிக்க வைத்து வருவதாகவும், இதற்கு, உரிய அனுமதி இல்லை எனவும், மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, நடவடிக்கை எடுக்க, கலெக்டர் நாகராஜன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, குளச்சல் அருகே அனுமதி இல்லாமல் குழந்தைகள் காப்பகம் நடத்தப்பட்டு வருவதாக, கிடைத்த தகவலை தொடர்ந்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். இங்கு, 13 மாணவியர் தங்க வைக்கப்பட்டிருந்ததை கண்டு பிடித்த அதிகாரிகள் அவர்களை மீட்டனர். இது போல், மற்றொரு காப்பகத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். உரிய அனுமதி இல்லாமல் காப்பகம் செயல்பட்டு வந்ததை உறுதி செய்த அதிகாரிகள், அங்கு, தங்கியிருந்த 51 மாணவ, மாணவியரை மீட்டனர். இவர்கள் அனைவரும், நாகர்கோவிலில், அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்களில் 59 பேர், குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்; மற்றவர்கள், பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.