எம்.பி.பி.எஸ்., சீட் ஒதுக்க ரூ. 7.5 கோடி லஞ்சம்: இயக்குனர் தலைமறைவு
திருவனந்தபுரம்: கர்நாடகா மாணவருக்கு மருத்துவபடிப்புக்கான எம்.பி.பி.எஸ்., சீட் தர ரூ. 7.5 கோடி லஞ்சம் வாங்கிய புகாரில் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி இயக்குனர் மீது கர்நாடகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் தலைமறைவானார்.கர்நாடகா மாநிலம் மல்லேஸ்வரத்தைச் சேரந்த மாணவர் ஒருவர் எம்.பி.பி.எஸ்.,மருத்துவ படிப்புக்காக திருவனந்தபுரம் காரகோணம் மருத்துவக் கல்லூரியில் விண்ணப்பித்தார். இதன் இயக்குனர் பென்னட் ஆப்ரஹாம் என்பவர் எம்.பி.பி.எஸ்., சீட் ஒதுக்கிட ரூ. 7.5 கோடி கேட்டுள்ளார். அதன்படி ரூ. 7.5 கோடி லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் சீட் ஒதுக்காமல் இழுத்தடித்துள்ளார்.இது குறித்து கர்நாடகா லஞ்ச ஒழிப்பு போலீசில் மாணவர் கொடுத்த புகாரின் பேரில், மல்லேஸ்வரம் போலீசார் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரிக்குள் அதிரடியாக புகுந்து ரெய்டு நடத்தினர்.அப்போது இயக்குனர் பென்னட் ஆப்ரஹாம் இல்லை. தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.முன்னதாக பென்னட் ஆப்ரஹாம் பலரிடம் எம்.பி.பி.எஸ்., சீட் ஒதுக்கிட லஞ்சமாக ரூ. 500 கோடி பணம் பெற்ற தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அமலாக்கத்துறை விசாரணையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.