ஊரகத் திறனாய்வுத் தேர்வு அறிவிப்பு: 9ம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை!
சென்னை: தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் பயிலும் பள்ளி மாணவர்கள் தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு:தமிழக ஊரகப் பகுதிகளில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியரின் கல்வித் திறனை ஊக்குவிக்கும் நோக்கில் இத்தேர்வு கடந்த 1991 - 1992ம் கல்வி ஆண்டு முதல் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு 2026 - 2027ம் கல்வி ஆண்டிற்கான ஊரகத் திறனாய்வுத் தேர்வு வரும் நவ., 21ம் தேதி நடைபெறும்.இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலிருந்தும் தலா 50 மாணவர்கள் மற்றும் 50 மாணவிகள் வீதம் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஆண்டிற்கு ரூ.1000 வீதம் தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும். சென்னை மாவட்டம் தவிர்த்து, தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகள், கிராம பஞ்சாயத்துகள் மற்றும் டவுன்ஷிப் பகுதிகளில் அமைந்த அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் அனைவரும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர்.தகுதியும் ஆர்வமும் கொண்ட மாணவர்கள், தாங்கள் பயிலும் பள்ளிகள் மூலமாகவே இத்தேர்விற்கு விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான தேர்வுக் கட்டணமாக ரூ.10 மட்டும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, விருப்பமுள்ள மாணவர்கள் அக்., 7ம் தேதி பிற்பகல் முதல் அக்., 13ம் தேதிக்குள் தங்கள் பள்ளிகள் வாயிலாக உரிய கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.