உள்ளூர் செய்திகள்

எம்.பி.பி.எஸ். தகுதி மதிப்பெண் குறைக்கப்படுமா?

சென்னை: எம்.பி.பி.எஸ். படிப்புக்கு, மாணவர்களை சேர்ப்பதற்கான தகுதி மதிப்பெண்ணை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அகில இந்திய அளவில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உயிரியல், இயற்பியல், வேதியியல் பாடங்களில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருத்தல் வேண்டும் என்ற விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ கவுன்சில் இந்த விதிமுறையை வகுத்துள்ளது. ஆனால், தமிழகத்தில் அகில இந்திய விதிமுறைகளை விட, கூடுதலாக எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கு, 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்ற விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. பொது பிரிவினர், இப்பாடங்களில் 60 சதவீத மதிப்பெண்களும், மொத்த சராசரியில் 140 மதிப்பெண்களும் (70 சதவீதம்) பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. இந்த தகுதி வரையறை, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 60 சதவீதம் - 130 மதிப்பெண் என்றும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கு 55 சதவீதம் - 120 மதிப்பெண்கள் என்றும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பிரிவுக்கு 40 சதவீதம் - 80 மதிப்பெண்கள் என்றும் வகுக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலை உத்தரவிட்டுள்ளது. இவை அகில இந்திய விதிமுறைகளை விட கூடுதலாக வகுக்கப்பட்டுள்ளதால், தகுதி மதிப்பெண்களை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதுகுறித்து அகில இந்திய மருத்துவ சங்க தலைவரும், "டிடி" மருத்துவக் கல்லூரி நிர்வாகியுமான டி.டி.நாயுடு கூறும்போது, "இந்திய மருத்துவ கவுன்சில் வகுத்துள்ள தகுதி மதிப்பெண்ணை விட, அதிகமாக தமிழகத்தில் தகுதி மதிப்பெண் வரையறுக்கப்பட்டு உள்ளதால், ஏழை, எளிய கிராமப்புற மாணவர்கள், எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, அவர்களின் நலன் கருதி, தமிழக அரசு, எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான தகுதி மதிப்பெண்ணை குறைக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்