உள்ளூர் செய்திகள்

பத்தாம் வகுப்பிற்கு விலக்கு அளிக்கப்படுமா?

மதுரை: மாணவர்களின் நலன் கருதி சமச்சீர் கல்வியில் பத்தாம் வகுப்புக்கு மட்டும் இந்தாண்டு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் குணசேகரன் கூறினார். அவர் கூறியதாவது, "தனியார் பள்ளிகள் மேல் முறையீடு செய்து கட்டணத்தை வசூலிக்க, நீதிபதி ரவிராஜ பாண்டியன் குழு அனுமதிக்க வேண்டும். பள்ளிகள் ஜூன் 1ல் துவங்கும். சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல்படி, மொத்த செலவினத்துடன் 15 சதவீதம் வளர்ச்சி நிதி செலவாக சேர்த்து, கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். பத்து ஆண்டுகளுக்கு மேல் இயங்கும் தனியார் பள்ளிகளுக்கு, நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தில், ஆண்டுதோறும் விலைவாசிக்கு ஏற்ப சம்பளத்தை உயர்த்த அனுமதிக்க வேண்டும்.குறைந்த சம்பளம் பெறும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, இ.எஸ்.ஐ., சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். அரசு உயிர் காப்பீட்டுத் திட்டம் போல், குறைந்த செலவில் மருத்துவ வசதி கிடைக்க செய்ய வேண்டும். அனைத்து தனியார் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மீதான சொத்துவரி, வாகனவரி, பாடப்புத்தகங்கள், எழுது பொருட்களுக்கான விற்பனை மற்றும் சுங்கவரியை ரத்து செய்ய வேண்டும். மாணவர்களின் நலன் கருதி, நடப்பு ஆண்டில் பத்தாம் வகுப்பிற்கு சமச்சீர் கல்வியை அமல்படுத்தக் கூடாது. ஒன்பதாம் வகுப்பில் பாடங்களை மாறுதல் செய்யாமல், நேரடியாக பத்தாம் வகுப்பில் அமல்படுத்துவதால் கற்றலில் சிரமம், தேர்வில் பாதிப்பு ஏற்படும். பத்தாம் வகுப்பு பாடத் திட்டத்தை, அடுத்த ஆண்டில் அமல்படுத்தலாம். உயர்கல்வியில், குறிப்பாக ஐ.ஐ.எம்., (எம்.பி.ஏ.,) சேர்க்கையில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. 2013 ல், அகில இந்திய அளவில் உயர்நிலை கல்வியில் பொது கணிதம், அறிவியல் பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்கு ஏற்ப, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும். பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வில் சி.பி.எஸ்.இ., போல் பாடங்கள் அமைய வேண்டும். எல்லோரும் அரசு புத்தகங்களை வாங்க கட்டாயப்படுத்தப்படுகிறது. இதனால், தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு, சரியான பாடங்களை தேர்வு செய்யும் உரிமை பாதிக்கிறது. இவ்வாறு குணசேகரன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்