பாரதிதாசன் பல்கலையில் பட்டயப்படிப்புகள் துவக்கம்
திருச்சி பாரதிதாசன் பல்கலை கல்வி நிலைக்குழு கூட்டம் நேற்று பல்கலை வளாகத்தில் நடந்தது. இதில் பல்கலை துணைவேந்தர் மீனா, பதிவாளர் ராமசாமி, பாடத்திட்ட மேம்பாட்டு மைய இயக்குனர் பார்த்தசாரதி மற்றும் கல்வி நிலைக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், பாரதிதாசன் பல்கலை துணைவேந்தர் மீனா பேசியதாவது: நடப்பு 2011-12ம் ஆண்டில் புதிய பாடத்திட்டங்கள் துவங்கப்படவுள்ளது. இதில், முதுநிலை நிகழ்கலை, கலாச்சார நடனம், நாடகம், காட்சிக்கலை ஆகிய பாடத்திட்டங்களும், எம்.எஸ்.ஸி.,யில் புள்ளியியல், பையோ டைவர்சிட்டி, ஜியாலாஜி, எம்.பி.ஏ.,வில் மார்க்கெட்டிங், சிஸ்டம் மேனேஜ்மெண்ட், ஹாஸ்பிட்டல் மேனேஜ்மெண்ட், எம்.ஏ.,வில் ஜர்னலிசம் அண்டு மாஸ் கம்யூனிகேசன் ஆகிய பட்டப்படிப்புகள் துவங்கப்படவுள்ளது. பட்டயப்படிப்புகளில் ஜர்னலிசம் அண்டு மாஸ் கம்யூனிகேசன், சுற்றுச்சூழல் மானுடவியல், மானுடவியல், சைவ சித்தாந்தம் ஆகியவையும், சான்றிதழ் படிப்பில் வெப் டிசைனிங், நெட்வொர்க் மேனேஜ்மெண்ட், சமஸ்கிருதம் (பகுதிநேரம்), ஹிந்தி ஆகிய பாடத்திட்டங்களும் துவங்கப்படுகிறது. இதுதவிர, எம்.பி.ஏ.,வுக்கென தனித்துறை துவங்குவது குறித்து சிண்டிகேட் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்படும். முனைவர் பட்ட நெறிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டு, ஆய்வுக்குழு கூட்டத்தில் வைக்கப்பட்டு பின் கல்வி நிலைக்குழுவில் பரிசீலிக்கப்பட்டு ஆட்சிக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆய்வு நெறியாளர் அங்கீகாரம் பெற முனைவர் பட்டம் பெற்ற பின் ஆராய்ச்சி அனுபவம் அல்லது முனைவர் பட்டம் பெற்ற பின் ஒருதாள் தேசிய அல்லது உலகளாவிய அளவில் வெளியீடு செய்திருக்க வேண்டும். முனைவர் பட்ட நெறிமுறை விதிகள் தளர்த்தப்பட்ட பின் 464 ஆய்வு நெறியாளர்களுக்கு பல்கலை அங்கீகாரம் வழங்கியுள்ளது. முனைவர் பட்ட ஆய்வு அங்கீகாரம் பெற்ற துறைகளில் தான் நடைபெற வேண்டும். இதை நடைமுறைப்படுத்த அனைத்து கல்லூரிகளிலும் அங்கீகாரம் பெறாத துறைகள் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் முனைவர் ஆய்வுத்துறையாக அங்கீகாரம் பெற வேண்டும். இதுகுறித்து அந்தந்த கல்லூரி முதல்வர்களுக்கு ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடந்த ஆய்வுக்குழு கூட்டத்தில் முனைவர் பட்ட நெறிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டு அவை சிண்டிகேட் ஒப்புதல் பெற்ற பின் ஜூலை முதல் நடைமுறைப்படுத்தப்படும். முனைவர் பட்ட ஆய்வு நெறியாளர் அங்கீகாரம் பெற்றவர்கள் ஆய்வியல் நிறைஞர், ஆய்வு வழிகாட்டி அங்கீகாரம் பெறத் தேவையில்லை. இந்த கல்வியாண்டில் தமிழ்ச்செம்மொழி அறிமுகம் திறன்சார் விருப்பப்பாடத்தில் ஆறு தாள்கள் மூன்று தாள்களாக குறைக்கப்பட்டது. 2001லிருந்து அனைத்து பைல் திட்டங்களிலும் உள்ள தாள்களுக்கு 2008 திறன்சார் விருப்பப்பாடத்தில் உள்ள தாள்களுக்கு இணையான தாள்கள் கண்டறியப்பட்டு வருவதால், வரும் கல்வியாண்டுக்கு திறன்சார் விருப்பப்பாடத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. திறன்சார் விருப்ப பாடத்திட்டங்கள் மறுஆய்வு செய்யப்பட்டு 2012-13ம் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.