உயர்கல்வி தரத்தை மேம்படுத்த யோசனை
"உயர்கல்வி தரத்தை மேல்நாடுகளுக்கு இணையாக உயர்த்த வேண்டும்" என காந்தி கிராமிய பல்கலை முன்னாள் துணைவேந்தர் பங்கஜம் பேசினார். இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலையின் 24வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. டில்லியில் நடந்த விழாவில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்கள் புரந்தேஸ்வரி, அகமத் பட்டங்களை வழங்கி வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசினர். மதுரை மண்டல விழாவிற்கு இயக்குனர் சண்முகம் தலைமை வகித்து பேசியதாவது: இப்பல்கலை பின்தங்கிய மாவட்டங்களின் கல்வித் தேவையை பூர்த்தி செய்கிறது. கல்லூரி மாணவர்களுக்கு ஆங்கில செயல் கல்வி, வியாபார செயல்திறன் கல்வி, உணவு, ஊட்டச்சத்து பாடங்களில் வேலைவாய்ப்பு திறனை அதிகப்படுத்தி வருகிறது. அனைவருக்கும் கல்வி திட்டத்தின் உதவியுடன் மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி அளிக்கிறது, என்றார். காந்தி கிராம பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் பங்கஜம்: இந்திய அளவில் உயர்கல்விக்கு மாணவர்கள் செல்வது 15 சதவீதமாகத்தான் உள்ளது. ஆனால் கனடாவில் 88 சதவீதம், ஆஸ்திரேலியாவில் 79 சதவீதம், அமெரிக்காவில் 80 சதவீதமாக உள்ளது. அந்தளவிற்கு இங்கும் உயர்கல்வி செல்வோர் சதவீதம் உயர வேண்டும். உயர்கல்வியின் தரத்தையும் மேல்நாடுகளின் தரத்திற்கு மேம்படுத்த வேண்டும், என்றார். மதுரை அண்ணா தொழில்நுட்ப பல்கலை பதிவாளர் இ.பி.பெருமாள் பிள்ளை: 4 ஆயிரம் மாணவர்களுடன் துவங்கிய இப்பல்கலை தற்போது 40 லட்சம் மாணவர்களுடன் செயல்படுகிறது. தொலை நிலை கல்வி மூலம் வேலை வாய்ப்புகளுக்கு ஏற்ப மாணவர்கள் உருவாவது அதிகரிக்கும். நவீன தொழில்நுட்பம் உருவாகியுள்ள நிலையில் தொலைநிலை கல்வி தற்போது வெகு எளிதாகிவிட்டது. இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு திறமையான ஆட்கள் தேவை. அதற்கு இது உதவும், என்றார்.