‘தினமலர்’ செய்திக்கு அமைச்சர் பாராட்டு
விழுப்புரம்: தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தினமலர் வெளியிட்ட செய்தியை பாராட்டி பேசினார். விழுப்புரம் அரசு பொறியியல் கல்லூரியின் புதிய வகுப்புகள் துவக்க விழாவில் அமைச்சர் பொன்முடி பேசுகையில்,‘தமிழக அரசு அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலம் புதிதாக 6 புதிய பொறியியல் கல்லூரிகளை துவக்கியுள்ளது. தமிழக முதல்வர் கடந்த 1ம் தேதி அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த விழாவில் 6 புதிய பொறியியல் கல்லூரிகளையும் துவக்கி வைத்தார். விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் என்ற முறையில் நான் பேச அதிகாரிகளிடம் சில புள்ளி விவரங்களை கேட்டு வாங்கி வைத்திருந்தேன். ஆனால், விழாவிற்கு முதல் நாளே (31ம்தேதி) ‘தினமலரில்’ அந்த செய்தி வந்து விட்டது. அவர்களுக்கு எப்படித் தெரியுமோ தெரியவில்லை. ‘இன்ஜினியரிங் கல்லூரிகளில் 78 ஆயிரத்து 228 மாணவர்கள் சேர்க்கை’ என்ற தலைப்பில் தினமலரில் வெளிவந்த அந்த செய்தியில் கல்லூரிகளின் எண்ணிக்கை, மொத்த இடங்கள், நிரப்பப்பட்ட இடங்கள், பிளஸ் 2 தமிழ் வழிக் கல்வி பயின்றவர்கள், ஆங்கில வழிக் கல்வி பயின்றவர்கள், கிராமப்புற மாணவர்கள், நகர்புற மாணவர்கள் என அனைத்து புள்ளி விபரங்களும் குறிப்பிடப்பட்டிருந்தது. உண்மையில் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய பாராட்டத்தக்க ஒரு நல்ல செய்தி அது. இவ்வாறு அமைச்சர் பொன்முடி பேசினார்.