கழிப்பறை வசதியற்ற மேல்நிலைப் பள்ளி
பெரியகுளம்: வடுகபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டு 71 ஆண்டுகள் ஆகிறது. பெரியகுளம் தாலுகாவில், கிராமத்தில் கட்டப்பட்ட முதல் பள்ளி. இங்கு பெரியகுளம், வடுகபட்டி, மேல்மங்கலம், காமக்காபட்டி மற்றும் உட்கடை கிராமங்களில் இருந்து ஆயிரம் மாணவ,மாணவியர் படிக்கின்றனர். இங்கு மாணவ, மாணவிகளுக்காக பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சிறுநீர் கழிப்பிடம் சேதமடைந்துள்ளது. இரண்டு ஆண்டுகளாக மாணவ, மாணவிகள் மரத்தடி ஒதுக்குப்புறமான இடங்களுக்கு சென்று வருகின்றனர். பெரியகுளம் வட்டார வளமைய அலுவலகம் வடுகபட்டி பள்ளியில் செயல்பட்டு வருகிறது. நடப்பு கல்வியாண்டிலாவது மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கழிப்பிட வசதி செய்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.