உள்ளூர் செய்திகள்

‘நியூட்ரினோவால் எந்த ஆபத்தும் இல்லையாம்’

எதிர்ப்பு: தேனி மாவட்டம், தேவாரம் அருகே, பொட்டி புரத்தில், நியூட்ரினோ ஆய்வுக் கூடம் அமைக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், இந்தத் திட்டத்துக்கு, தமிழக அரசியல் கட்சிகளும், சில தன்னார்வ அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. ’நியூட்ரினோ ஆய்வால், பூகம்பம் ஏற்படும்; சுனாமி உருவாகும்’ என்றெல்லாம் பிரசாரம் செய்து வருகின்றன. இந்நிலையில், நியூட்ரினோ ஆய்வகத்தால், என்ன பலன் என்பது குறித்து, ராமதுரை கூறியதாவது: மனித குலம் தோன்றுவதற்கு முன், நியூட்ரினோ இருக்கிறது. இதனால், பாதிப்பு ஏற்படும் என்றால், மனித குலமே தோன்றி இருக்காது. நியூட்ரினோ, சூரியனில் இருந்து வருவதோடு, பூமியிலும் இருக்கிறது. அதை செயற்கையாகவும் உற்பத்தி செய்ய முடியும். சூரியனில் இருந்து வரும் நியூட்ரினோ, அனைத்துப் பொருள்களிலும் புகுந்து கொண்டு செல்லும் தன்மை உடையது. நாள்தோறும், பல ஆயிரம் கோடி நியூட்ரினோக்கள், நம் உடலை துளைத்துச் செல்கின்றன. நம் விரல் நுனியில், 6,000 கோடி நியூட்ரினோக்கள் செல்கின்றன என, ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதைத் தடுத்து நிறுத்த முடியாது. நியூட்ரினோ குறித்து ஆய்வு செய்ய, இந்தியா முன் வந்துள்ளது. பாறைகள் உள்ள பகுதியில் தான், நியூட்ரி னோக்களை ஆய்வு செய்ய முடியும். குறிப்பாக, கருங்கற்கள் இருக்கும் பகுதியில் தான், இதைச் செய்ய முடியும். மேலும், ஒரே வகையான கற்கள், பூமிக்கு மேல் இருந்து, கீழ் வரை இருக்க வேண்டும். அப்படிப்பட்ட புவி அமைப்பு, தேனி மாவட்டத்தில் இருப்பதால், அங்கு ஆய்வுக் கூடம் அமைக்கப்படுகிறது. ஜப்பான், ஐரோப்பா, அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில், 43 நியூட்ரினோ ஆய்வுக் கூடங்கள் உள்ளன. இவற்றினால் எந்த பாதிப்பும் இல்லை. சுற்றுச்சூழல் பாதிப்பு, இயற்கை சீற்றங்கள் ஏற்படும் எனக் கூறுவதெல்லாம் அறியாமையின் வெளிப்பாடே. மைல்கல்: நியூட்ரினோக்கள், மிக விரைவாக, எதிலும் புகுந்து செல்லும் தன்மை கொண்டதால், அவற்றை தகவல் தொடர்புக்கு பயன்படுத்த முடியுமா என்பதே ஆய்வின் அடிப்படை நோக்கம். அமெரிக்காவில், நியூட்ரினோ மூலம், செய்தி அனுப்பும் ஆய்வு செய்துள்ளனர். வளர்ந்த நாடுகளுக்கு சரிநிகர் சமமாக, இந்தியா வும், நியூட்ரினோ ஆய்வில் அடி எடுத்து வைப்பது பாராட்டுக்கு உரியது. அறிவியல் வளர்ச்சியில், நியூட்ரினோ ஆய்வு ஒரு மைல்கல். இதனால், எந்த பாதிப்பும் மனித குலத்துக்கு ஏற்படாது. இவ்வாறு, அவர் கூறினார். இந்தியாவில் நியூட்ரினோ ஆய்வு: சூரியன் மற்றும் விண்மீன்களிலிருந்து வெளிப்படும் அணு துகள்களே, ’நியூட்ரினோ’ என அழைக்கப்படுகிறது. கனமற்ற இத்துகள்கள், விண்?வளியில் இருந்து கீழ் இறங்குகின்றன. ஒவ்வொரு, நொடிப் பொழுதிலும், பல கோடி நியூட்ரினோக்கள், பூமி மீது பாய்ந்த வண்ணம் உள்ளன. இவற்றை ஈர்த்து ஆய்வு செய்வது கடினம். இவற்றை ஈர்த்து ஆய்வு செய்வதே, நியூட்ரினோ ஆய்வு திட்டம். இந்த ஆய்வின் மூலம், சூரியன் குறித்த ரகசியங்கள், விண்வெளியின் ஆற்றல், பூமியின் பிறப்பு ஆகியவை குறித்து அறியலாம். உலகளவில், இந்த ஆய்வு திட்டம், 1930களில் துவங்கியது. 1998ல், நியூட்ரினோக்களுக்கு எடை உண்டு என கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், நியூட்ரினோ பற்றி பல உண்மைகளைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகளுக்கு, 2002க்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்தியாவில், காஸ்மிக் கதிர்களில் இருந்து உண்டாகும் நியூட்ரினோக்கள், கோலார் தங்க சுரங்கத்தில், 1965ல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சுரங்கங்கள், 15 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டன. இதையடுத்து, இந்திய அறிவியல் நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் இணைந்து, நியூட்ரினோ ஆய்வுக்காக, பாதாள அறிவியல் கூடத்தை அமைக்க முன் வந்தன. தமிழகத்தின், தேனி மாவட்டம், தேவாரம் அருகே, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி யில் உள்ள, பொட்டிப்புரம் ஊரில், இந்த ஆய்வுக் கூடத்தை அமைக்க முடிவு செய்தனர். * மலை உச்சியில் இருந்து, 1.3 கி.மீட்டர் கீழே, அடிவாரப் பகுதி யில், 2.5 கி.மீட்டர் தூரத்திற்கு சுரங்கப் பாதை தோண்டி, ஆய்வுக் கூடம் அமைக்கப்படும். 50 டன் எடையிலான, நியூட்ரினோவை ஈர்க்கும் கருவி, இக்கூடத்தில் பொருத்தப்படும். * ஆய்வுக் கூடத்தின் நாலா புறங்களிலும், 1 கி.மீட்டர் பரிமாணத்துக்கு, பாறை இருந்தால் மட்டுமே, நியூட்ரினோ ஆய்வு நடத்த முடியும். மேலும், விண்ணில் இருந்து பாயும், பிற கதிர்களை தடுத்து, நியூட்ரினோவை மட்டும் ஈர்க்க முடியும். * நியூட்ரினோ ஆய்வு கூடத்தில், ஆபத்தை விளைவிக்கும் கதிர் வீச்சு பொருள்கள் பயன்படுத்தப்படாது. அணுகுண்டு ஆராய்ச்சிக்கும், இந்த ஆய்வுக்கும் தொடர்பில்லை. கலாம் கூறுவது என்ன? இத்திட்டம் குறித்து, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறுகையில், ”நியூட்ரினோவின் எடை வரிசையை, இந்த ஆய்வு கண்டுபிடிக்கும். இப்பகுதியில் உள்ள அறிவியல் நிலையங்கள், கல்லூரிகள் இத்திட்டத்தால் பயனடையும். இங்கு தோண்டி எடுக்கப்படும் கற்கள் மூலம், இப்பகுதியின் அடிப்படை கட்டமைப்பு மேம்படும். நியூட்ரினோ ஆய்வு திட்டம் மூலம், தமிழகம் பெருமையடையும்,” என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்