சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி
உடுமலை: தனித்திறன்களை வெளிப்படுத்துவதில் தயக்கம் காட்டும் வளர் இளம் பருவ மாணவர்களை, அதிகமாக ஊக்குவிக்க வேண்டும் என, சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு நடந்த பயிற்சி வகுப்பில் அறிவுறுத்தப்பட்டது.உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் ஒன்றியத்திலுள்ள, சமூக அறிவியல் பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கத்தின் சார்பில் பயிற்சி வகுப்பு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. பயிற்சியாளர் சுப்ரமணியம், ஆசிரியர்களுக்கு சமூக அறிவியல் பாடம் தொடர்பாகவும், மாணவர்களுக்கு கல்வியில் ஏற்படும் இடர்பாடுகளை களைவதற்கும் பயிற்சி அளித்தார். அதில், துவக்க மற்றும் நடுநிலை வகுப்புகளில், திறமைகளை ஆர்வத்துடன் வெளிப்படுத்தும் மாணவர்கள் பலரும், வளர் இளம் பருவத்தை எட்டும் போது, திறமை இருப்பினும் அதனை வெளிப்படுத்த தயக்கம் காட்டுகின்றனர். காரணம், அவர்களுக்கு ஏற்படும் மனக்குழப்பமும் தன்னம்பிக்கையின்மையுமே. தேர்வில் வெற்றி பெறுவதற்கு, மாணவர்களை பாடத்தை நன்றாக படிக்க செய்வது மட்டுமின்றி மனதளவிலும் தயார்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் ஆசிரியர்கள் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். தெளிவான முடிவு எடுப்பதற்கும், ஒரு செயலை சிந்தித்து செய்வதற்கும், திறமைகளை வெளிப்படுத்த எப்போதும் தயார் நிலையில் இருக்கும் அளவிற்கு, அவர்களை வாழ்வியல் திறன்களிலும் முன்னிலையில் இருப்பதற்கு பயிற்சி செய்ய வேண்டும். இவ்வாறு அறிவுறுத்தப்பட்டது. தவிர, பிரென்ச் ரெவல்யூசன் மற்றும் காலக்கோடுகள் உள்ளிட்ட பாடம் தொடர்பான பயிற்சிகளும் வழங்கப்பட்டது. பயிற்சிகளை, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் துரைசாமி மற்றும் சிவசக்தி காலனி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் செல்லதுரை ஒருங்கிணைத்தனர். பயிற்சியில், 60 ஆசிரியர்கள் பங்கேற்றனர். இப்பயிற்சி வகுப்பு இன்று (29ம் தேதி) மற்றும் 31ம் தேதி நடக்கிறது.