உள்ளூர் செய்திகள்

அறிவு வளர்ச்சி விழிப்புணர்வு வகுப்புகள்

கோவை: அங்கன்வாடி மையங்களில் படிக்கும் குழந்தைகள், அறிவுசார் செயல் பாடுகள் ஈடுபட, தாய்மார்களின் பங்கு குறித்த விழிப்புணர்வு வகுப்பு, வாரந்தோறும் நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மாவட்டத்தில், 1,697  அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இதில், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, சத்துமாவு, முட்டை, மதிய உணவுடன் கூடிய அடிப்படை கல்வி அளிக்கப்படுகிறது. தவிர, தனியார் பள்ளிகளுக்கு இணையாக, ஆங்கில வழிக் கல்வி, வண்ணப்படங்கள், செயல்வழி கற்றல் என, கற்பித்தல் முறையில், பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதை, குழந்தைகள் உள்வாங்கி கொள்ள, தாய்மார்களின் வழிகாட்டுதல் அவசியம். குழந்தைகளின் வயதுக்கேற்ப, உடல், மன ரீதியான மாற்றங்கள் குறித்து அறிந்து, சரியான முறையில் வழிநடத்த, தாய்மார்களுக்கு, வாரந்தோறும் விழிப்புணர்வு வகுப்பு நடத்தப்படுகிறது. இதில், மூலிகை தாவரங்கள், கீரை, காய்கறிகள் சாப்பிடுவதன் முக்கியத்துவம், கை கழுவுவதன் அவசியம், தன் சுத்தம் குறித்து, சான்றுகளுடன் விளக்கப்படுவதால், தாய்மார்கள் ஆர்வத்துடன் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறுவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அதிகாரிகள் கூறுகையில்,அங்கன்வாடி மையங்களில் படிக்கும் குழந்தைகள், அறிவுசார் செயல்பாடுகளில் ஈடுபட, தாய்மார்களின் ஒத்துழைப்பு அவசியம். சமூகம், குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து தான், அதிகளவிலான பழக்கங்களை, குழந்தைகள் கற்று கொள்கின்றனர். எனவே, குழந்தைகளை வழிநடத்துதல், சரிவிகித உணவு முறை, உடற்பயிற்சி, விளையாட அனுமதித்தல் குறித்து, தாய்மார்களுக்கு விரிவாக விளக்கப்படுகிறது. இதை பின்பற்றுவதால், குழந்தைகள் மத்தியில் பழக்கவழக்கம் சார்ந்த பல்வேறு மாற்றங்களை உணர முடிகிறது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்